சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய கைத்தறி கண்காட்சி மூலம் ரூ.1½ கோடி விற்பனைக்கு இலக்கு


சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய கைத்தறி கண்காட்சி மூலம் ரூ.1½ கோடி விற்பனைக்கு இலக்கு
x
தினத்தந்தி 2 Aug 2017 3:15 AM IST (Updated: 2 Aug 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடிக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கிய தேசிய கைத்தறி கண்காட்சி மூலம் நடப்பாண்டு ரூ.1½ கோடிக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழக ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்திய வரலாற்றில் 1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி சுதேசி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்க மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 3-வது தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி, தொடங்கிவைத்தார். பின்னர் அரங்கத்தில் அமைக் கப்பட்டுள்ள 42 கைத்தறி துணிகள் விற்பனை செய்யும் அரங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 2.56 லட்சம் கைத்தறி நெசவாளர்களை உறுப்பினர்களாக கொண்ட 1,156 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் மூலம் 2016-2017-ம் ஆண்டு 828 லட்சம் மீட்டர் கைத்தறி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.882 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இங்கு நடக்கும் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 7-ந் தேதி (திங்கட்கிழமை) வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.

30 சதவீதம் தள்ளுபடி

தமிழகத்தில் காஞ்சீபுரம், ஆரணி, சேலம், திருபுவனம், கோவை, விளந்தை, ஈரோடு, நாகர்கோவில் மற்றும் தெலுங்கானா, ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உற்பத்தியாகும் பல்வேறு கைத்தறி ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் உற்பத்தியாகும் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிற மாநில ரகங்களுக்கு தள்ளுபடி வழங்கப்படவில்லை. நடப்பாண்டு ரூ.1½ கோடி மதிப்பில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் பட்டு பூச்சி வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக மத்திய பட்டு வாரியம் பட்டு பூச்சிகளை பார்வைக்கு வைத்திருந்தனர். விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் தி.ந.வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story