கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தபோது வருமான வரித்துறை வேடிக்கை பார்த்தது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி


கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தபோது வருமான வரித்துறை வேடிக்கை பார்த்தது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 3 Aug 2017 4:45 AM IST (Updated: 2 Aug 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தபோது வேடிக்கை பார்த்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

கர்நாடகத்தில் நடத்தப்படும் சோதனை போன்று கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தபோது வேடிக்கை பார்த்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கர்நாடக மாநிலத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கி உள்ள விடுதிகளிலும், அது தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளிலும் ரெய்டு(சோதனை) செய்யும் வருமான வரித்துறை, சென்னை கூவத்தூர் விடுதியில் 120–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது வேடிக்கை பார்த்தது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுகிறது.

கூவத்தூர் விடுதியில் தடபுடலான விருந்துகளும், ஆட்டங்களும் பாட்டங்களும் கொண்டாட்டங்களுமாக, பிப்ரவரி 8–ந் தேதியில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பதவியேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிப்ரவரி 18–ந் தேதி வரை குதிரை பேரங்களும் தொடர்ந்தன.

கூவத்தூர் விடுதியில் சசிகலா சில நாட்கள் தங்கி உறுப்பினர்களிடம் பேரம் நடத்தினார். எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி சென்று சந்தித்து பேரம் நடத்தினார். ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரை பேரம் பேசப்பட்டது என்று கனகராஜ், சரவணன் ஆகிய இரு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகப் பேட்டியளித்த பிறகும் கூட, அந்த இருவரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி இந்த பேரத்தில் கைமாறிய கோடிக்கணக்கான பணம் பற்றி கண்டுகொள்ளவில்லை.

புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், முதல்–அமைச்சர் போட்டியிடுவதற்காக தன் பதவியிலிருந்து விலகினார். வருமான வரித்துறை உடனே அவரது வீட்டுக்குச் சென்று ரெய்டு செய்தது. ஆனால், தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்கள், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடைபெற்ற பேரம், சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் மீதெல்லாம் வருமான வரித்துறைக்கு எந்தச் சந்தேகமும் எழுவதில்லை. இவர்களிடம் ரெய்டு நடத்துவதில்லை.

எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூவத்தூர் கொண்டாட்டத்தை எல்லாம் பார்த்து இந்த மாநிலமும் சிரித்தது, நாடும் சிரித்தது. பேரத்தின் உச்சத்தில் கூட வருமான வரித்துறை கூவத்தூர் விடுதியில் ரெய்டு செய்யவில்லை.

ஏனென்றால், சுதந்திரமான வருமான வரித்துறையை கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் கூண்டுக் கிளி போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டது.

அ.தி.மு.க.வின் ஊழலை அரவணைக்கத் தயார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணிக்குத் தயார் என்று செய்திகளை கசிய விடுகிறது பா.ஜ.க. ஆகவே, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் ஊழல் ஒழிப்பின் முகத்திரை கூவத்தூரில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பேரத்தால் இன்று கிழிக்கப்பட்டு நிற்கிறது என்பதைத்தான், கர்நாடகாவில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டுகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு போன்ற சுதந்திரமிக்க அமைப்புகள் எல்லாம் அவமானத்துக்குரிய கூவத்தூர் பேரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசால் தூண்டப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கினை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story