ஜெயக்குமார் விரைவில் அமைச்சர் பதவியை இழப்பார் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் எச்சரிக்கை


ஜெயக்குமார் விரைவில் அமைச்சர் பதவியை இழப்பார் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2017 5:00 AM IST (Updated: 2 Aug 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

ஜெயக்குமார் விரைவில் அமைச்சர் பதவியை இழப்பார் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் அளித்த பேட்டி வருமாறு:–

கட்சியும், ஆட்சியும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார். அவர் பெயர் பக்கத்தில் போட்டிருக்கும் டிகிரியை அவர் படித்து வாங்கினாரா?, காசு கொடுத்து வாங்கினாரா? என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கட்சிக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். இதுகூடத் தெரியாமல் அவர் அமைச்சராக இருக்கிறார்.

எங்களை விட்டு பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை பற்றியும் அடிக்கடி அவர் கருத்து கூறுகிறார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து கே.பி.முனுசாமி மறுப்பு கூறி வருகிறார். இது தொடர்கதை. ஆனால், அவர் வகிக்கும் மீனவர் பிரிவு செயலாளர் பதவியையும், அமைச்சர் பதவியையும் விரைவில் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன். பொதுச்செயலாளரோ, துணைப் பொதுச்செயலாளரோ நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், ஜெயக்குமார் அந்தப் பதவிகளை இழந்துவிடுவார்.

ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவராக இருக்கலாம். ஆனால் அவருக்கும் பொதுச்செயலாளர் சின்னம்மாதான். இந்த அடிப்படை அறிவு இல்லாமல் ஜெயக்குமார் தனது பெயர் பக்கத்தில் டிகிரி போட்டு வைத்திருப்பதில் என்ன இருக்கிறது. அமைச்சரவை மாற்றம் பற்றி ஹேஷ்யம் எதுவும் கூறமுடியாது. ஆனால் இதே ரீதியில் ஜெயக்குமார் தொடர்ந்தால் கட்சிப்பதவியும் போய்விடும். கொடியும் போய்விடும்.

தலைமைக்கழக அலுவலகத்துக்கு டி.டி.வி.தினகரன் செல்வாரா என்று கேட்டால், எங்கள் அலுவலகத்துக்கு செல்வதற்கு யார் அனுமதியையும் பெறத்தேவையில்லை. 5–ந் தேதிக்குப் பிறகு கட்சியின் வளர்ச்சி பற்றி அவர் பேட்டி மூலம் தெரிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story