விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் குவாரி பரிவர்த்தனைகள் வருமானவரித்துறை ஆவணங்கள் மூலம் தகவல்


விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் குவாரி பரிவர்த்தனைகள் வருமானவரித்துறை ஆவணங்கள் மூலம் தகவல்
x
தினத்தந்தி 3 Aug 2017 5:15 AM IST (Updated: 2 Aug 2017 11:24 PM IST)
t-max-icont-min-icon

விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்றது வருமான வரித்துறை மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை,

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி தொடர்பான பரிவர்த்தனைகள் அவருடைய வீட்டு சமையல்காரர் பெயரில் நடந்திருப்பது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 7–ந் தேதி ஒரே சமயத்தில் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் சோதனை நடத்தினார்கள்.

அவருடைய வீட்டில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் நிர்வாகிகள் பட்டியலுடன் சிக்கியது.

வருமான வரித்துறையினரால் கோடிக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதே துறையில் உள்ள புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவருடைய தந்தை சின்னதம்பி, மனைவி ரம்யா, உதவியாளர் சரவணன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடந்தது.

இந்தநிலையில் அவருக்கு சொந்தமான திருவேங்கைவாசலில் உள்ள குவாரியும், புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

வருமான வரித்துறையினர் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு சமையல்காரர் சுப்பையா பெயரிலும் தொழில் தொடர்பான பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டு சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி தொடர்பான தொழில் பரிவர்த்தனைகள் சுப்பையா பெயரில் நடந்து இருப்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பினாமியாக சுப்பையா செயல்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை இந்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் நீட் தேர்வு தொடர்பாக அவர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதால் அடுத்த வாரம் அவரிடமும், அவருடைய சமையல்காரர் சுப்பையாவிடமும் வருமானவரித்துறை நடத்தலாம் என்று தெரிகிறது.

மேற்கண்ட தகவலை வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story