சோழிங்கநல்லூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுமான பணிகளை தொடங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சோழிங்கநல்லூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம்  கட்டுமான பணிகளை தொடங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2017 3:00 AM IST (Updated: 3 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க விதித்த தடையை நீக்கி கட்டுமான பணிகளை தொடங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்தவர் சேகர். இயற்கை அறக்கட்டளை நிறுவனரான இவர், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்காக கடந்த 2013-ம் ஆண்டு அரசு ஒதுக்கியது. அந்த நிலம் சதுப்பு நிலம் ஆகும். இங்கு கட்டிடங்கள் கட்டினால் சதுப்புநிலத்தில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, அங்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், சோழிங்கநல்லூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க தடை விதித்தது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.நம்பியார், உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், சதுப்பு நிலத்தில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. அங்கு கட்டுமான பணியை தொடங்கலாம். கட்டிடம் கட்டப்படும் பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளை தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் ஆய்வு செய்து சாத்தியக்கூறு இருப்பின் அவற்றை சதுப்பு நிலப்பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். கட்டிடம் கட்டப்பட்டுள்ள பகுதியை தவிர்த்து அதை சுற்றி உள்ள இடங்களை போக்குவரத்துத்துறையினர் பாதுகாக்க வேண்டும்.

அந்த பகுதியில் கட்டுமானக் கழிவுகளையோ, வேறு எந்த பொருட்களையோ கொட்டக்கூடாது. மற்ற இடத்தில் கட்டிட பணிகள் ஏதேனும் தொடங்குவதாக இருந்தால் தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதுபோன்று அனுமதி கோரினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சதுப்பு நில ஆணையம் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story