காவிரி நதிநீர் பிரச்சினையில் மோடி அரசு பச்சை துரோகம் செய்கிறது வைகோ குற்றச்சாட்டு


காவிரி நதிநீர் பிரச்சினையில் மோடி அரசு பச்சை துரோகம் செய்கிறது வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Aug 2017 2:00 AM IST (Updated: 3 Aug 2017 11:03 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நதிநீர் பிரச்சினையில் மோடி அரசு பச்சை துரோகம் செய்கிறது என வைகோ குற்றம் சாட்டினார்.

சென்னை

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பூந்தமல்லி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கலந்து கொண்டு சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். தொண்டர்களுடன் சேர்ந்து மரங்களை அறுக்கும் எந்திரம் மற்றும் அரிவாள், பொக்லைன் எந்திரம் மூலம் சீமைக்கருவேல மரங்களை அவர் அகற்றினார்.

பின்னர் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:–

பெரும் அபாய கட்டத்தில் தமிழகம் உள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடக மாநிலம் காவிரி நதிநீர் பிரச்சினையிலும், கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இதுவரை வந்து கொண்டிருந்த தண்ணீரை தடுப்பதற்கு கேரள மாநிலமும், ஆண்டு ஆண்டுகாலமாக நாம் பயன்படுத்தி வந்த பாலாற்று நீரை தடுப்பதில் ஆந்திர மாநிலமும் வஞ்சகம் செய்கின்றன. இதில் காவிரி நதிநீர் பிரச்சினையில் நரேந்திர மோடி அரசு பச்சை துரோகம் செய்கிறது.

பசுஞ்சோலையாக இருந்த தமிழகம், பாலைவனமாக மாறப்போகிறது. இதை தடுப்பது எப்படி?. காவிரியில் தண்ணீரை நான் எதிர்பார்க்கவில்லை. மேகதாது அணை கட்டி முடித்த பிறகு மேட்டூருக்கு தண்ணீர் வராது. ஆயிரம் அடிக்கு கீழ் தோண்டினாலும் தண்ணீர் வராது. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.

சீமைக்கருவேல மரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால் மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் இருந்து விதைகள் கொண்டு வரப்பட்டு தூவப்பட்டன. 1960–களில் அதிகமாக தூவப்பட்டன. வேலிக்கருவேலமரத்தை வெட்டி விற்றால் விறகுக்கு பயன்படும் என்று கூறினார்கள். ஒரு காலத்தில் வெட்டி விற்றனர். தற்போது யாரும் இதனை வெட்டி பிழைப்பது இல்லை.

எந்த செடிகள் கருகினாலும் சீமைக்கருவேல மரம் கருகாது. பச்சை, பசேல் என்றுதான் இருக்கும். காரணம் நிலத்தடி நீரை அப்படியே உறிஞ்சி கொள்கிறது. காற்றிலே உள்ள ஈரபதத்தை உறிஞ்சு கொள்கிறது. சீமைக்கருவேல மரங்கள் தமிழகம் முழுவதும் மொத்தமாக அடர்ந்து விட்டன.

தமிழகம் பாலைவனமாக மாறிவிடாமல் தடுக்கவே நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளோம். சீமைக்கருவேல மரத்தை அகற்றுவதற்கு அரசுக்கு முழு அக்கறை கிடையாது. இந்த பணியை தீவிரப்படுத்துவதற்கு தீரன் சின்னமலை நினைவு நாளான இந்த நாளை தேர்ந்தெடுத்து மீண்டும் பணியை தொடங்கி உள்ளேன்.

அவர் வாள் ஏந்தி வெள்ளையனை விரட்டினார். நாங்கள் அரிவாள் ஏந்தி சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதற்கு புறப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.

Next Story