8–ந் தேதி நடக்க இருந்த கடையடைப்பு தள்ளிவைப்பு ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு


8–ந் தேதி நடக்க இருந்த கடையடைப்பு தள்ளிவைப்பு ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 2:45 AM IST (Updated: 4 Aug 2017 10:49 PM IST)
t-max-icont-min-icon

8–ந் தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

சென்னை,

ஜி.எஸ்.டி. தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்–அமைச்சர் உறுதி அளித்ததாகவும், அதனால் 8–ந் தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு சென்னை ஓட்டல்கள் சங்கம், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், சென்னை ஜுவல்லரி மற்றும் டைமன்ட் மெர்ச்சண்ட் சங்கம், தமிழ்நாடு பர்னிச்சர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் உள்பட பல சங்கங்களின் நிர்வாகிகள், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.

ஜி.எஸ்.டி. சட்ட வரிவிகிதங்களால் வணிகர்களுக்கும், மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனு அளித்தனர். அப்போது, சாதாரண பேக்கரி தயாரிப்புகளான பிஸ்கட், மிட்டாய், பொரி உருண்டை, கடலைமிட்டாய் ஆகியவற்றுக்கு 18 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது இனிப்பு பண்டங்களுக்கு விதித்துள்ள 5 சதவீதம் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த வேண்டும்.

மெழுகுவர்த்தி, அகர்பத்தி போன்ற கலாசாரம் சம்பந்தப்பட்ட குறுந்தொழில் வணிகத்துக்கு உட்பட்ட பொருட்கள், ரூ.500 வரையுள்ள காலணிகள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட ஜி.எஸ்.டி. தொடர்பான மேலும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தெரிவிப்பதாக முதல்–அமைச்சர் உறுதி அளித்தார்.

எனவே, 8–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்க இருந்த கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தென்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை அறிவிப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story