60 நாட்கள் ‘கெடு’ முடிந்த நிலையில் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயண திட்டம் அறிவிப்பு


60 நாட்கள் ‘கெடு’ முடிந்த நிலையில் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயண திட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 3:30 AM IST (Updated: 4 Aug 2017 11:03 PM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாட்கள் ‘கெடு’ முடிந்தநிலையில், முதற்கட்டமாக 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

சென்னை,

டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாட்கள் ‘கெடு’ முடிந்தநிலையில், முதற்கட்டமாக 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். வருகிற 14–ந் தேதி மேலூரில் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கு 60 நாட்கள் ‘கெடு’ விதிப்பதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அவர் விதித்த ‘கெடு’ நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில், கட்சி அலுவலகத்திற்கு இன்று (சனிக்கிழமை) நேரில் வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த டி.டி.வி.தினகரன் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை அவர் கைவிட்டார்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்த டி.டி.வி.தினகரன் நேற்று காலை சென்னை பெசன்ட்நகரில் உள்ள இல்லத்தில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தோப்பு வெங்கடாசலம், ஜெயந்தி, முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தண்டரை மனோகரன், செந்தமிழன், திருப்பூர் சிவகாமி, நடிகர் குண்டு கல்யாணம், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், நேற்று மாலை டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை ஆண்டு முழுவதும் நடத்தி, அவரின் கொள்கைகளும், கட்சியின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளும் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும் என்பதை ஜெயலலிதா இலக்காக நிர்ணயித்திருந்தார். அவரது கட்டளைகளையும், அவர் விட்டுச்சென்ற கடமைகளையும் நிறைவேற்றும் வகையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை சிறப்புடன் நடத்திக்காட்ட வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக வாழ்ந்து வந்த நம் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா எப்பொழுதும் அவர் நினைவிலேயே தன்னுடைய காலத்தை கழித்து வருகிறார். ஜெயலலிதா எண்ணியவாறும், சசிகலா திட்டமிட்டவாறும், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பித்திடும் வகையில், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டம் வாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நாள், மாவட்டம், இடம் வருமாறு:–

வருகிற 14–ந் தேதி – மதுரை மாநகர், புறநகர் மாவட்டம், மேலூர். 23–ந் தேதி – வடசென்னை வடக்கு மாவட்டம். 29–ந் தேதி – தேனி மாவட்டம், தேனி. செப்டம்பர் 5–ந் தேதி – கரூர் மாவட்டம், கரூர். செப்டம்பர் 12–ந் தேதி – தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்டம், தஞ்சாவூர்.

செப்டம்பர் 23–ந் தேதி – திருநெல்வேலி மாநகர், புறநகர் மாவட்டம், திருநெல்வேலி. செப்டம்பர் 26–ந் தேதி – தர்மபுரி மாவட்டம், தர்மபுரி. செப்டம்பர் 30–ந் தேதி – திருச்சி மாநகர், புறநகர் மாவட்டம், திருச்சி. அக்டோபர் 5–ந் தேதி – சிவகங்கை மாவட்டம், சிவகங்கை.

சசிகலா சார்பாக, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில், மேற்கண்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story