பட அதிபர்கள், பெப்சியுடன் சினிமா பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சு வார்த்தை சமரசம் ஏற்படுவதில் இழுபறி


பட அதிபர்கள், பெப்சியுடன் சினிமா பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சு வார்த்தை சமரசம் ஏற்படுவதில் இழுபறி
x
தினத்தந்தி 5 Aug 2017 3:00 AM IST (Updated: 4 Aug 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

பட அதிபர்கள், பெப்சியுடன் சினிமா பிரச்சினைக்கு தீர்வு காண தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சென்னை,

இருதரப்புக்கும் சமரசம் ஏற்படுவதில் இழுபறி நீடித்தது.

சம்பள பிரச்சினையில் பட அதிபர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு ஏற்படுத்த தொழிலாளர் நலத்துறை முன்வந்தது. இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நேற்று இந்த கூட்டம் நடந்தது.

தொழிலாளர் நல இணை ஆணையர் ரவிசங்கர் யாசின், சிறப்பு துணை ஆணையர் பேகம் ஆகியோர் முன்னலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரகாஷ்ராஜ், ஞானவேல்ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரும், பெப்சி சார்பில் ஆர்.கே.செல்வமணி, அங்கமுத்து சண்முகம், பி.என்.சாமிநாதன், எஸ்.ஆர்.சந்திரன், சபரி கிருஷ்ணன், தனபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 8 மணிவரை நீடித்தது. இதில் பட அதிபர்கள் மற்றும் பெப்சி நிர்வாகிகள் இடையே காரசார விவாதம் நடந்தது. தற்போது நடந்து வரும் குழப்பங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் காரணம் இல்லை என்று பட அதிபர்கள் தெரிவித்தனர். பயணப்படி பிரச்சினையில் பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகளை நிறுத்தியதாக குற்றம் சாட்டினார்கள்.

பெப்சி தொழிலாளர்களை மட்டும் பணியில் அமர்த்துமாறு நிர்ப்பந்திக்க முடியாது என்றும் வேறு தொழிலாளர்களை வைத்தும் படப்பிடிப்புகளை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

இதனை கூட்டத்தில் கலந்துகொண்ட பெப்சி நிர்வாகிகள் ஆட்சேபித்தனர். தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சி தொழிலாளர்களுடன் வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஏற்கனவே பேசி முடிக்கப்பட்ட சம்பளத்தை குறைக்கக் கூடாது என்றும் பொதுவிதிகளில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார்கள்.

பெப்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. மீண்டும் வருகிற 11–ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story