‘தவறு செய்யவில்லை என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன்’ அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை


‘தவறு செய்யவில்லை என்பதை சட்ட ரீதியாக நிரூபிப்பேன்’ அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை
x
தினத்தந்தி 5 Aug 2017 4:30 AM IST (Updated: 5 Aug 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி சோதனை விவகாரத்தில், தவறு செய்யவில்லை என்பதை சட்டரீதியாக விரைவில் நிரூபிப்பேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசலில் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடம், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, நான் குறிப்பாக எம்.எல்.ஏ. உள்ளிட்ட எந்த அரசு பதவியிலும் இல்லாத போது 2007-ம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக வாங்கப்பட்ட நிலமாகும். புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதானமான தொழில் கல்குவாரி. இது சாதாரணமாக சாலை போடுவதற்கும், கட்டிடங்கள் கட்டுவதற்கும் தேவையான ஜல்லி கல் உற்பத்தி செய்யும் ‘கிரஷர்’ தொழிலாகும். இந்த தொழில் 2007-ம் ஆண்டு என் பெயரில் தொடங்கப்பட்டது.

இது சட்ட விதிகளுக்கு உட்பட்டு கனிம வள, சுற்றுச்சூழல், மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறைகளின் முறையான அனுமதி பெறப்பட்டு இயங்கி வருகிறது. இதைபோலவே 120 ‘புளு மெட்டல்’ நிறுவனங்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இயங்கி வருகின்றன. இதில் எங்கள் குடும்பத்தின் நிறுவனமும் ஒன்று. இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை வரி, வருமான வரி உள்ளிட்டவைகள் செலுத்தப்பட்டு வருகின்றன. நான் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் குடும்ப நிறுவனங்கள் என் பெயரில் இயங்கக்கூடாது என்பதற்காக வங்கி வரவு, செலவு உள்ளிட்ட முழு நிர்வாகப் பொறுப்பையும் எனது தந்தை பெயருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளேன். எனது தந்தை தான் இவற்றை நிர்வகித்து வருகிறார்.

தவறு செய்யவில்லை

பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், சமையல்காரர் சுப்பையா என்று கூறுவது மிக, மிக வேதனைக்குரியது. சுப்பையா, ஒரு தொழில் முனைபவர், வருமான வரி கட்டுபவர், எங்கள் நிறுவனத்தில் சப்-காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். மேலும், சுப்பையா என்ற பெயரில் எனக்கு சமையல்காரரோ, உதவியாளரோ இல்லை. வேறு எந்த மாற்று நபரின் பெயரிலும் எங்கள் குடும்பத்தினர் தொழில் நடத்தவில்லை. ஏப்ரல் 7-ந் தேதி எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் வருமான வரி சோதனை நடந்தது. தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது.

3 முறையும் நான் சட்டத்திற்கு உட்பட்ட குடிமகன் என்ற முறையில் காலதாமதம் இன்றி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளேன். அதில் நான் சட்ட ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன்.

தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது. குட்கா பிரச்சனையில் சொல்லப்படும் மாதவராவ் என்பவர் யார்? என்பது எனக்கு தெரியாது என்பதையும், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதையும், அரசியல் காழ்ப்புணர்சியால் புணையப்பட்ட குற்றச்சாட்டு என்பதையும், இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்பதையும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.

மனப்பால்

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும், எனக்கு நெருக்கடி கொடுத்து என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்ற எண்ணத்தோடும் இது போன்ற சேற்றை வாரி இறைக்கும் செயலை செய்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். என்னை பொறுத்தவரையில் நான் எல்லாவற்றையும் பொறுமையாக அணுகி என் மீது எந்த தவறும் இல்லை என்பதை சட்ட ரீதியாக உறுதியாக நிரூபிப்பேன்.

மக்களுக்காக முழு நேரமும் சுழன்று பணியாற்றிக்கொண்டிருக்கும் அரசின், திட்டங்களையும், இந்திய அளவில் முதன்மையான நம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் நற்பணிகளையும், வேகத்தையும் முடக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் மு.க.ஸ்டாலின். இவரின் திசை திருப்பும் முயற்சி ஒருபோதும் நடக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் என்னை விட வயதில் மூத்தவர். நான் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய நிலையில் அவர் இல்லை என்றே நான் நம்புகின்றேன். இருப்பினும் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், ‘காலம் தனது கணக்கை சரியாக முடிக்கும்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story