எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டிய விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டிய விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2017 3:45 AM IST (Updated: 5 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

மீனவர்கள் நிவாரணம் பெற வருகிற 10-ந் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நிவாரணம் பெற வருகிற 10-ந் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், கடல் பகுதியில் எண்ணெய் கொட்டியது.

எண்ணெய் படலத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவ தந்தை சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ்குமார், மீனவர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் உள்பட 4 பேர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘பாதிக்கப்பட்ட மீனவர்கள் நிவாரணம் பெற விண்ணப்பங்களை அளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களை அதிகாரிகள் பெறவேண்டும். அதன்பின்னர் 6 வாரத்துக்குள் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கடந்த மாதம் 6-ந் தேதி உத்தரவிட்டது.

இந்தநிலையில் தியாகராஜன் தீர்ப்பாயத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி பாதிக்கப்பட்ட மீனவர்கள் விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வழங்கவில்லை. எனவே, தீர்ப்பாய உத்தரவை அவமதித்ததற்காக மீன்வளத்துறை அதிகாரிகளை தண்டிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.மகேசுவரன் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறாதது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தீர்ப்பாய உத்தரவை அவமதித்ததாக கூறி மீன்வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை முடித்து வைத்தார். மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் நிவாரணம் பெற வருகிற 10-ந் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும், அந்த விண்ணப்பங்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story