எம்.ஜி.ஆருடன் சத்துணவு சாப்பிட்டதை பாக்கியமாக கருதுகிறேன் நூற்றாண்டு விழாவில் ஆசிரியர் நெகிழ்ச்சி


எம்.ஜி.ஆருடன்  சத்துணவு சாப்பிட்டதை பாக்கியமாக கருதுகிறேன் நூற்றாண்டு விழாவில் ஆசிரியர் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 5 Aug 2017 5:15 AM IST (Updated: 5 Aug 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் திருச்சியை சேர்ந்த ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திருச்சி,

காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இலவச மதிய உணவு திட்டத்தை, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது சத்துணவு திட்டமாக மாற்றினார். ‘முதல்-அமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம்’ என அதற்கு பெயர் சூட்டப்பட்டது.

1982-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி என்ற இடத்தில் சத்துணவு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த சாந்தா ஷீலா நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன், குழந்தைகளுடன் அமர்ந்து எம்.ஜி.ஆரும் உணவு சாப்பிட்டார்.

பின்னர் சத்துணவு திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினரும், ‘தினத்தந்தி’ அதிபருமான மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக வழங்கிய நன்கொடையில் சத்துணவு கூடம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் எம்.ஜி.ஆர். நாட்டினார்.

அன்று எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்த இடத்தில், தற்போதும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் எம்.ஜி.ஆர். இடதுபுறம் சிறு மாணவன், வலதுபுறம் மாணவி ஒருவருடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிடும் புகைப்படம் வரலாற்றுச் சுவடு போல் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

தினத்தந்தி திரட்டிய தகவல்


35 ஆண்டுகள் உருண்டோடி, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் அரிய சாதனைகள் பற்றிய தொகுப்புகளை தினத்தந்தி திரட்டியபோது, அன்று எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சாப்பிட்ட சிறுவனை பற்றிய தகவல் கிடைத்தது.

அந்த பாலகன் இன்று வளர்ந்து 40 வயதை தொட்டுவிட்டார். அவரது பெயர் கே.புஷ்பராஜ். எம்.எஸ்சி. பி.எட். படித்துள்ள இவர் தற்போது ஆசிரியர் பணியை செய்து வருகிறார். காட்டூர் பாத்திமாபுரத்தில் வசித்துவரும் இவரது மனைவி பெயர் ஜூலி மேரி. இந்த தம்பதியினருக்கு மேஷா (வயது5) என்ற பெண் குழந்தையும், ஆண்டோ (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

ஆசிரியர் நெகிழ்ச்சி


ஆசிரியர் புஷ்பராஜை ‘தினத்தந்தி’ சார்பில் சந்தித்தபோது எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதை பற்றி நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-

நான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை காட்டூர் பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் படித்தேன். 5 ஆண்டுகள் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றினேன். தற்போது வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

நன்றாக சாப்பிடு என்றார்


எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சாப்பிட்ட நேரத்தில் நான் 1-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று காலை எப்போதும்போல் பள்ளிக்கு சென்றதும் எனது ஆசிரியர் ‘நீ சி.எம்.முடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்’ எனக்கூறி அழைத்துச் சென்றார். எனக்கு அப்போது சி.எம். என்றால் என்ன என்றே தெரியவில்லை. மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் உள்ள பந்தியில் என்னை அமர வைத்தனர்.

அப்போது எனது அருகில் எம்.ஜி.ஆர். வந்து அமர்ந்தார். அவர் அமர்ந்ததும் சாப்பிடத் தொடங்கினோம். தம்பி நன்றாக சாப்பிடு, சாப்பாடு நன்றாக இருக்கிறதா? என கேட்டுக்கொண்டே எம்.ஜி.ஆர். சாப்பிட்டார். 35 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது நினைத்தாலும் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

பெரும் பாக்கியம்


நான் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதை எனது தந்தையார் அடிக்கடி பெருமையுடன் என்னிடம் கூறி இருக்கிறார். நான் 10-ம் வகுப்பு படித்தபோது தான் நாம் எவ்வளவு பெரிய தலைவருடன் சாப்பிட்டு இருக்கிறோம் என்பது எனக்கு தெரியவந்தது. நான் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

சில நாட்களுக்கு முன் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து என்னிடம் பழைய புகைப்படத்தை காட்டி அது நான் தானா என்பதை உறுதி செய்து கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு அருகில் இருந்து சாப்பிட்ட இன்னொரு மாணவி பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

தற்போது அந்த தலைவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் என்னைப் பற்றிய தகவல்களை திரட்டி வெளியிடுவதை நினைத்து பார்த்தாலே பெருமையாக இருக்கிறது. தமிழக அரசு எனக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வுபெற்ற ஆணையர்


எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தபோது திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருந்த நாராயணசாமி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறும்போது, “அந்த விழா ஏற்பாடுகளை செய்தவர்களில் நானும் ஒருவன். தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர், நான் உள்பட சிலரே எம்.ஜி.ஆர். சாப்பிட்டபோது அருகில் இருந்தோம். எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சாப்பிட்ட சிறுவன் பற்றிய தகவல்களை திரட்டுவதற்கு நானும் உதவி புரிந்துள்ளேன். அந்த மாணவி பற்றிய தகவல்களையும் தினத்தந்தி திரட்டி வெளியிட்டால் உதவியாக இருக்கும். நான் துணை கலெக்டர் வரை பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வுபெற்றேன்” என்றார்.

‘தினத்தந்தி’க்கு தெரிவிக்கலாம்


எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மாணவியின் படமும் அருகில் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவி யார்? இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அந்த மாணவி பற்றிய தகவல் தெரிந்தால் திருச்சி ‘தினத்தந்தி’ அலுவலகத்துக்கு 0431-2401561, 2401562 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

Next Story