பெட்ரோல் நிலையங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாரத் பெட்ரோலியம் எச்சரிக்கை


பெட்ரோல் நிலையங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாரத் பெட்ரோலியம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 Aug 2017 3:45 AM IST (Updated: 5 Aug 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் நிலையங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் டி.ராஜ்குமார் கூறினார்.

சென்னை,

பாரத் பெட்ரோலியம் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.ராஜ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கடந்த 1-ந்தேதி முதல் 20 முதல் 50 சதவீதம் வரை விற்பனை கமிஷன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. முன்பு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.57 கமிஷன் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.3.02 முதல் ரூ.3.63 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.1.64 கமிஷன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1.98 முதல் ரூ.2.59 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி, குறைந்தபட்ச ஊதியம், பிரதம மந்திரி கொண்டுவந்துள்ள காப்பீடு, வங்கியில் ஊதியம் ஆகியவை கடந்த 1-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசலின் தரம் மற்றும் அளவு போன்ற விஷயங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் பெட்ரோல் பங்க்குகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் ஆய்வு செய்ததில் முறைகேடுகளில் ஈடுபட்ட 12 பெட்ரோல் பங்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் பங்க் முறைகேடுகள் குறித்து பொதுமக்களும் புகார் செய்யலாம். புகார் செய்யும் எண்கள் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு கியாஸ் மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். தற்போது கியாஸ் மானியம் ரத்து குறித்து எந்த திட்டமும் இல்லை. நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தும் இடத்தில் தான் இருக் கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். இயக்குனர் (விற்பனை) எஸ்.ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story