எம்.ஜி.ஆர். புகழை நிலைநாட்டும் வகையில் மனித நேய அறக்கட்டளை சார்பில் 7 புதிய திட்டங்கள்


எம்.ஜி.ஆர். புகழை நிலைநாட்டும் வகையில் மனித நேய அறக்கட்டளை சார்பில் 7 புதிய திட்டங்கள்
x
தினத்தந்தி 6 Aug 2017 3:15 AM IST (Updated: 6 Aug 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் புகழை நிலைநாட்டும் வகையில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் 7 புதிய திட்டங்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் சைதை துரைசாமி அறிவித்தார்.

சென்னை,

சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வி அறக்கட்டளை மற்றும் இதயக்கனி மாத இதழ் இணைந்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மனித நேய மைய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தலைமை தாங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பிற்பகலில் எம்.ஜி.ஆருடன் பழகிய, பணிபுரிந்த முன்னாள் அமைச்சர்கள், அன்றைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், எம்.ஜி.ஆர். உடல்நலம் பேணிய மருத்துவர்கள், ராமாவரம் தோட்ட எம்.ஜி.ஆர். இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக பணியாற்றியபோது அவருடன் பணிபுரிந்த உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திரை உலகை சேர்ந்த நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் ஆகியோரும் விழாவில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கமான எம்.ஜி.ஆர். வளர்ச்சிக்கு வேர்களாக இருந்த எம்.ஜி.ஆரின் புகழுக்கும் பெருமைக்கும், அவருக்காக தங்களை அர்ப்பணித்து கொண்டு பணியாற்றிய அவரது உண்மை தொண்டர்கள், விசுவாசிகள், தீவிர ரசிகர்கள் மற்றும் சமூகத்தில் பல நிலைகளில் உள்ள பண்பாளர்கள் ஆகியோரின் நினைவுகளை, அனுபவங்களை தக்க புகைப்பட ஆதாரங்களுடன் ஒழுங்குபடுத்தி ‘வேர்களுக்கு வெளிச்சம்’ என்ற தலைப்பில் ஆவணமாக, ஒளிப்படமாக தயார் செய்யும் பணி இந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். அன்னம் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் தேவைப்படுவோருக்கு உணவு வழங்கப்படும். எம்.ஜி.ஆர். இலவச திருமண மண்டபம், எம்.ஜி.ஆர். இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 126½ அரை பவுன் தங்க செயின் வழங்கப்படுகிறது.

மனித நேய அறக்கட்டளை ரத்த வங்கி, வேர்களுக்கு வெளிச்சம் என்ற ஆவணப்படம் தயாரிக்கப்படும் என்பது உள்பட 7 புதிய திட்டங்கள் இந்த நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்படுகிறது. இதை நூற்றாண்டு விழா நிறைவு நாளான அடுத்த ஆண்டு(2018) ஜனவரி 18–ந்தேதிக்குள் நிறைவேற்றுவோம்.

எம்.ஜி.ஆர். மாபெரும் மக்கள் சக்தி உள்ள தலைவர். எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்தால், விழா எடுப்பவருக்கு பெருமை. எம்.ஜி.ஆர். புகழ் தானாக வளருகிறதே தவிர, யாரும் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. அவர் ஒரு அதிசயம். எம்.ஜி.ஆரின் நேர்மை, தூய்மை, சேவை, மக்கள் நலன் இதை தான் நாங்கள் அவரிடம் கற்றுக்கொண்ட பண்பு. அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story