அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி வழக்கு


அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்டங்களிலும் கண்மாய்களை தூர்வாரக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மாற்றம் இந்தியா அமைப்பின் தலைவர் நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழகத்தில் கடும் வறட்சியால் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. கடந்த 2005–ம் ஆண்டு இதுபோன்ற சூழ்நிலை நிலவிய போது, தமிழகத்தின் அனைத்து கண்மாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் தமிழக கண்மாய் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டம் கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஐகோர்ட்டு உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் கண்மாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்காது.

தமிழக அரசின் சட்டப்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரவும், கண்மாயை அளந்து எல்லையை வரையறை செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 15–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story