மகள் காதல் திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை


மகள் காதல் திருமணம் செய்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Aug 2017 1:57 PM IST (Updated: 6 Aug 2017 1:57 PM IST)
t-max-icont-min-icon

சேலம் ஆத்தூர் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.


சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாய்க்கன் பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தாண்டானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி ராணி (45).

இவர்களுக்கு மோகனா (21), ஆர்த்தி (19) என்ற 2 மகள்களும், நவீன்குமர் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் ஆர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நவீன்குமார் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மோகனா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தமிழக அரசின் வேலையில் சேர டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.

பயிற்சி வகுப்பிற்கு சென்றபோது மோகனாவிற்கும் பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்ற ஆட்டோ டிரைவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மோகனாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் மோகனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலனை சந்திக்க தடைவிதித்தனர். ஆனாலும் மோகனாவால் மணியை மறக்க முடியவில்லை.

அடிக்கடி காதலனை சந்தித்து வந்தார். இதனால் மோகனாவை மீண்டும் பெற்றோர் திட்டினார்கள். இவர்கள் காதல் விவகாரம் ஊர் மக்களுக்கும் தெரியவந்தது. அவர்கள் இதுகுறித்து ராஜேந்திரனிடம் கேட்டனர். தன் மகளால் தனது குடும்பத்திற்கு அவமானம் வந்து விட்டது என்று கருதினர். காதலனை மீண்டும் சந்திக்க தடைவிதித்தாலும் மோகனா அடிக்கடி மணியை சந்தித்தார்.

பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விவரத்தை அவரிடம் கூறினார். பின்னர் மோகனாவும், மணியும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நேற்று பாதுகாப்பு கேட்டு காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைத்தனர்.

மகள் மாயமானது குறித்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்து இருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது மோகனா காதல் திருமணம் செய்த விவகாரம் அவர்களுக்கு தெரியவந்தது. மேலும் காதல் திருமணம் செய்த 2 பேரும் பாதுகாப்பு கேட்டு காரிப்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து மோகனாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் மனவேதனை அடைந்தனர். தனது மகளால் குடும்பத்திற்கு அவமானம் வந்து விட்டது என்று கருதி அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

ஆனால், இதுபற்றி தெரியாத போலீசார் நாளை (அதாவது இன்று)காலை காரிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறினர்.

போலீஸ் நிலையம் செல்ல வேண்டிய துர்பாக்கியம் நிலை வந்து விட்டது என்று வருந்திய ராஜேந்திரன், அவரது மனைவி ராணி, மகள் ஆர்த்தி, மகன் நவீன்குமார் ஆகியோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதையடுத்து நேற்று இரவு அவர்கள் 4 பேரும் விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டனர். கணவன்-மனைவி இருவரும் தங்களது குழந்தைகள் 2 பேருக்கும் வி‌ஷத்தை கொடுத்துவிட்டு தாங்களும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 4 பேரும் ஒருவர்பின் ஒருவராக வாயில் நுரை தள்ளி துடிதுடித்து இறந்து விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரம் ஆகியும் ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன், ராணி, அவர்களது மகள் ஆர்த்தி, மகன் நவீன்குமார் வாயில் நுரை தள்ளிய படி பிணமாக கிடந்தனர். இதுகுறித்து உறவினர்கள் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story