அநியாயங்களை, சூழ்ச்சிகளை செய்து ஆட்சியை கலைக்க நினைப்பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது


அநியாயங்களை, சூழ்ச்சிகளை செய்து ஆட்சியை கலைக்க நினைப்பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது
x
தினத்தந்தி 7 Aug 2017 4:45 AM IST (Updated: 7 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

அநியாயங்களை, சூழ்ச்சிகளை செய்து ஆட்சியை கலைக்க நினைப்பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை,

டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் நேற்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் குறித்த விவகாரம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திலும் இந்த விவகாரம் இருக்கிறது. நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் இந்த பிரச்சினை குறித்த வி‌ஷயம் நிலுவையில் இருக்கும்போது, துணை பொதுச்செயலாளரே இல்லை என்று தான் நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

இல்லை என்று எடுத்துக்கொள்ளும்போது அதுவே ஒரு கேள்விக்குறி. அப்படி இருக்கும்போது அவர் நியமனம் என்பது நிச்சயம் செல்லாத ஒன்று. இதில், முழுமையான அளவுக்கு இன்னார்.. இன்னார்.. என்று பார்ப்பதை விட, எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இந்த இயக்கத்தை ஒரு மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கிக் காட்டி, 1½ கோடி தொண்டர்களோடு வழிநடத்துகின்ற இந்த இயக்கம், இப்போது சீரான முறையிலே, சிறப்பான முறையிலே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

எனவே, இதற்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்கின்ற வகையில் யாராக இருந்தாலும் சரி. அதாவது ‘ஏ’ ஆக இருந்தாலும் சரி, ‘பி’ ஆக இருந்தாலும் சரி. ‘ஏ’ யார் என்று புரிந்துகொள்வீர்கள். ‘பி’ யார் என்று புரிந்துகொள்வீர்கள்.

ஆட்சியை கலைக்க வேண்டும். ஆட்சி வீட்டுக்கு போக செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு உண்டான எல்லாவிதமான அநியாயங்களை செய்தால், சூழ்ச்சிகளை செய்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story