‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுடெல்லி,
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும் என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் இறப்பு ஏற்படாது. இறப்பு என்பது டெங்கு காய்ச்சலால் மட்டுமே ஏற்படாது. டெங்கு காய்ச்சலுடன் வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்கும். டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வளர்ந்த கொசுக்களை ஒழிக்க சுகாதாரத்துறையிடம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. இருந்தாலும் கொசுப்புழுக்கள், கொசு முட்டையை ஒழிப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
மருத்துவ கல்வி சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீட்டை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, நம்பர் ஆவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்குக்கான அவசர சட்டத்தை பொறுத்தவரை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும். இப்படியா? அல்லது அப்படியா? என்பது தெரிந்துவிடும்.மாநில அரசின் இடங்களுக்குத்தான் நாம் விலக்கு கேட்கிறோம். நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கோ, தனியார் கல்லூரி இடங்களுக்கோ அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமே பொது நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தது. பிற மாநிலங்களில் ஏதோ ஒரு நுழைவுத்தேர்வு மருத்துவ படிப்புக்கு இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.