சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்


சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 8 Aug 2017 3:57 AM IST (Updated: 8 Aug 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலின் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், அவரை போலீசார் கைது செய்தனர் என்று சேலம் மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தி.மு.க.வினர் தூர்வாரி சீரமைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதியில் உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை தி.மு.க.வினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர். அந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக கடந்த ஜூலை 27–ந் தேதி தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கச்சராயன்பாளையம் சென்றார்.

ஆனால், அவரை கோவை மாவட்டத்தில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சரின் தொகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், தூர்வாரப்பட்ட கச்சராயன்பாளையம் ஏரியில் இருந்து அதிகாரிகள் துணையுடன், அ.தி.மு.க.வினர் மணல் அள்ளுகின்றனர். எனவே, வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளைத் தி.மு.க.வினர் தூர்வார, தமிழக அரசு தடை விதிக்கக்கூடாது. இடையூறும் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் மாவட்ட கலெக்டர் வி.சம்பத் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

மு.க.ஸ்டாலின் எந்த ஒரு இடத்துக்கு செல்வதற்கும் உரிமை உள்ளது. அதேநேரம், குறிப்பிட்ட இடத்துக்கு ஒரு நபர் சென்றால், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை ஏற்படும்போது, அந்த நபரை முன்னெச்சரிக்கை அடிப்படையில் கைது செய்ய போலீசாருக்கு உரிமை உள்ளது.

கச்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட பலருடன் மு.க.ஸ்டாலின் சென்றதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி, அவரை அங்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். மேலும் ஏரி, குளங்களில் விவசாயத்துக்காக வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தான் கச்சராயன்பாளையம் ஏரியில் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உள்ளூர் தாசில்தார் முறையான அனுமதியை வழங்கியுள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘மு.க.ஸ்டாலின் கச்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்றால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கலெக்டர் கூறுவதை ஏற்க முடியாது. அவர் அங்கு செல்வதால், எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘மு.க.ஸ்டாலின் ஏரியை பார்வையிட சென்றால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது’ என்று மனுதாரர் தரப்பு வக்கீல் கூறுகிறார். எனவே, கச்சராயன்பாளையத்துக்கு மு.க.ஸ்டாலின் எத்தனை பேருடன் சென்றால், அவருக்கு அனுமதி வழங்கப்படும்? என்பதை தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்’ என்று அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story