‘அன்புமணி ராமதாசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


‘அன்புமணி ராமதாசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 9 Aug 2017 4:00 AM IST (Updated: 9 Aug 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

அன்புமணி ராமதாசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘அமைச்சர் செங்கோட்டையன் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் கல்வித்துறைக்கு செய்த சேவை என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க அவருடனான விவாதம் உதவியாக இருக்கும்.

12-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்’ என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டதற்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-

மனசாட்சியோடும், வெளிப்படைத்தன்மையோடும் இந்த அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவரை கொடுக்கப்பட்டுள்ள தடையில்லா சான்றிதழை வைத்து பார்த்து அவர் தெரிந்து கொள்ளட்டும். அதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்.

மேலும் 4 ஆயிரம் ஆய்வக உதவியாளர்களுக்கான(லேப் அசிஸ்டெண்ட்) பணிகளை சில மாதங்களுக்கு முன் நிரப்பினோம். அதேபோல், 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாற்றம் கவுன்சிலிங் மூலம் நடத்தப்பட்டது. இதையும் அவர் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.

நான் இதுவரை மனசாட்சியோடு தான் செயல்படுகிறேன். இவர்கள் பேச்சுக்கு (டாக்டர் அன்புமணி ராமதாஸ்) பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவர்கள் மீதே வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் அவர்கள் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு வந்து என்னிடம் பேசட்டும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story