கிணற்றை வழங்கக்கோரி போராட்டம்: கிராம மக்களுடன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனை


கிணற்றை வழங்கக்கோரி போராட்டம்: கிராம மக்களுடன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனை
x
தினத்தந்தி 10 Aug 2017 3:00 AM IST (Updated: 10 Aug 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சிக்கு கிணற்றை வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களுடன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனை நடத்தினர்.

பெரியகுளம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தோட்டம் இருந்தது. இந்த தோட்டத்தில் புதிதாக ஒரு கிணறு வெட்டும் பணி நடந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் நீர் வற்ற தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி, ஜூன் மாதம் முதல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த கிணறு இருந்த தோட்டம், அதே ஊரை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு 12-ந் தேதி விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்தும், கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரியும் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் லட்சுமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் கிராம கமிட்டியினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று மாலை கிராம மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் லட்சுமிபுரத்தில் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் பங்கேற்றனர். கூட்டத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றை ஊராட்சிக்கு வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். மேலும் அந்த நிலத்தின் அருகில், மற்றொரு கிணறு வெட்டிக்கொள்வதாகவும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் இதனை கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இன்னும் 2 நாட்களில் தகவல் தெரிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறினர். அதன்பின்னர் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story