தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்


தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 10 Aug 2017 2:00 AM IST (Updated: 10 Aug 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 7-ந் தேதி இரவு தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 41 மீனவர்கள் 10 எந்திர படகுகளில் தாங்கள் வழக்கமாக மீன்பிடிக்கும் இடங்களில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களின் படகுகளால் 2 மீன்பிடி படகுகள் மீது மோதினர். இதையடுத்து அவற்றில் இருந்த 7 மீனவர்கள் கடலுக்குள் விழுந்தனர். அந்த 7 மீனவர்கள் உள்பட 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 10 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து 2 எந்திர படகுகளில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை 8-ந் தேதி (நேற்று முன்தினம்) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழகத்தின் கடலோர மாவட்டத்தை சேர்ந்த அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை பற்றி பலமுறை தங்கள் கவனத்துக்கு நான் கொண்டு வந்துள்ளேன். அப்பாவி மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் தங்கள் படகுகளால் மோதி அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சமீபத்தில் ராமேசுவரத்தில் தங்கள் முன்னிலையில் மீன்பிடி முறையில் மாற்றம் கொண்டு வரலாம் என்று பேசப்பட்ட தருணத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. மீன்பிடி பிரச்சினையில் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இலங்கை அரசு மதிப்பு கொடுப்பதில்லை என்பதையே இந்த தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன. மேலும் மறைந்த எங்கள் தலைவி ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பது ஒன்று தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று அடிக்கடி கூறி வந்ததையும் இச்சம்பவங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றன.

இந்த பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதற்கும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கும் தூதரக ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே கேட்டு கொண்டுள்ளேன். எனவே நடுக்கடலில் நமது மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இலங்கை கடற்படையின் செயலுக்கு நமது பலத்த கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இப்பிரச்சினையை இலங்கை அரசின் மேல்மட்ட அளவில் எடுத்து செல்லுமாறு நான் தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே தற்போது கைது செய்யப்பட்டுள்ள 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் உள்ள மொத்தம் 64 மீனவர்கள் மற்றும் அவர்களின் 125 படகுகளை உடனடியாக மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story