ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி


ஆசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 10 Aug 2017 5:00 AM IST (Updated: 10 Aug 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே 8-ம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் புனித இஞ்ஞாசியர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் சகாய டேனியல் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம்பாளையம், ஆனந்தம்பாளையம், சித்தார், குதிரைக்கல்மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலை 10.30 மணி அளவில் திடீரென அங்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ‘பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபு, மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அவரை இங்கு வரச்சொல்லுங்கள்’ என்று கூறினர். அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், ‘அந்த ஆசிரியர் இன்று (அதாவது நேற்று) பள்ளிக்கு வரவில்லை’ என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கல் வீசி பள்ளி அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதன் காரணமாக பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ-மாணவிகளை வெளியே அனுப்பி பள்ளியை மூடினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பகல் 11 மணி அளவில் அம்மாபேட்டை-அந்தியூர் செல்லும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் அங்கு சென்று பொதுமக்களை அழைத்து பள்ளி வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் பிரபு, இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட 6 பேரை திருப்பூருக்கு கபடி போட்டிக்காக பஸ்சில் அழைத்துச் சென்றார். போட்டி முடிந்ததும் அன்று இரவு ஊரில் விட்டு சென்றுவிட்டார். வீட்டுக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவி பெற்றோரிடம், ‘பஸ்சில் வைத்து உடற்கல்வி ஆசிரியர் பிரபு என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார்’ என்று கூறி கதறி அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் மறுநாள் காலை பள்ளி நிர்வாகத்தை போனில் தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்தை கூறி அந்த ஆசிரியரை கண்டிக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த ஆசிரியரை கண்டித்தனர். இதனால் கோபம் அடைந்த அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து, ‘ஏன் என்னை பற்றி வீட்டிலும், பள்ளி நிர்வாகத்திலும் புகார் செய்தாய்’? என்று திட்டியுள்ளார். அதனால் மனம் உடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விஷம் குடித்துவிட்டார்.

பெற்றோர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் மாணவி கவலைக்கிடமாக இருந்ததால் அங்கிருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனால் மாணவியிடம் தகாத முறையில் நடந்த உடற்கல்வி ஆசிரியர் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இங்கு வர சொல்லுங்கள். நாங்கள் அவரிடம் ஏன் மாணவியிடம் தகாத முறையில் நடந்தாய்? என்று கேட்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், ‘அவர் பள்ளியில் இல்லை. வெளியே சென்றுவிட்டார். அவர் வரமாட்டார்’ என்றனர்.

அதற்கு பொதுமக்கள், ‘அந்த ஆசிரியர் வந்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர். ஆனால் அதை பள்ளி நிர்வாகத்தினர் ஏற்க மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மதியம் 2 மணிக்கு அம்மாபேட்டை சென்று மேட்டூர்-பவானி செல்லும் அந்தியூர் பிரிவு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து போலீசார் ஈரோட்டில் இருந்து அதிவிரைவுப்படை, ஆயுதப்படை போலீசாரை வரவழைத்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இதன்காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவுகிறது. இந்தநிலையில் உடற்கல்வி ஆசிரியர் பிரபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story