கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேர் விடுதலை நிறுவனரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு குறைத்தது


கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேர் விடுதலை நிறுவனரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு குறைத்தது
x
தினத்தந்தி 11 Aug 2017 3:45 AM IST (Updated: 10 Aug 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 7 பேரை விடுதலை செய்தும், பள்ளியின் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்தும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இச்சம்பவம் குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி உள்பட 24 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் அப்ரூவராக மாறினார். வழக்கின் போது 2 பேர் இறந்துவிட்டனர்.


இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்தது. 2014–ம் ஆண்டு ஜூலை 30–ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 10 பேருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தீர்ப்பில், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு குழந்தை இறப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வீதம், 94 குழந்தைகள் இறப்புக்கு 940 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.51 லட்சத்து 65 ஆயிரத்து 700 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், என்ஜினீயர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதே சமயம் 11 பேரை கீழ்கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கும்பகோணம் போலீசார் மேல்முறையீடு செய்தனர்.

மேல்முறையீட்டு வழக்குகளை, ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஏப்ரல் மாதம் உத்தரவிட்டனர். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை, சென்னை ஐகோர்ட்டில் வைத்து நேற்று நீதிபதிகள் பிறப்பித்தனர்.

அந்த தீர்ப்பில், பள்ளியின் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்தும், தலைமை ஆசிரியர் உள்பட 7 பேரை விடுதலை செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:–

பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு, கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை மாற்றி அமைக்கிறோம். அவர் இதுவரை சிறையில் இருந்த காலத்தையே, தண்டனை காலமாக இந்த கோர்ட்டு கருதுகிறது. அவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த அபராத தொகையை ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 500 ஆக குறைத்தும் உத்தரவிடுகிறோம்.

தாளாளர் சரஸ்வதி, மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுகிறது.

சமையல்காரர் வசந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவரது மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அதே சமயம் அவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை மாற்றி அமைக்கிறோம். அவர் இதுநாள் வரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக கருதுகிறோம்.

சாந்தலட்சுமி, விஜயலட்சுமி, பாலாஜி, தாண்டவன், துரைராஜ், சிவப்பிரகாசம், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை, அபராதத்தை ரத்து செய்கிறோம். அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பழனிச்சாமியும், வசந்தியும் இதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக கருதுவதாகவும், இதற்குமேல் தண்டனை அனுபவிக்க தேவையில்லை என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனால் அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆகிவிடுவார்கள். இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சுமார் 300 பக்கங்கள் கொண்டது. அதனால் தீர்ப்பின் முழு விவரம் வெளியாகவில்லை.


Next Story