சென்னை தேனாம்பேட்டையில் பரபரப்பு துப்பாக்கி குண்டு பாய்ந்து காட்பாடி காவலாளி படுகாயம்


சென்னை தேனாம்பேட்டையில் பரபரப்பு துப்பாக்கி குண்டு பாய்ந்து காட்பாடி காவலாளி படுகாயம்
x
தினத்தந்தி 11 Aug 2017 3:00 AM IST (Updated: 11 Aug 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

தவறுதலாக துப்பாக்கி வெடித்து, குண்டு பாய்ந்ததில் காட்பாடியை சேர்ந்த காவலாளி படுகாயம் அடைந்தார்.

சென்னை,

வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு வேனில் பணம் எடுத்து சென்றபோது, தவறுதலாக துப்பாக்கி வெடித்து, குண்டு பாய்ந்ததில் காட்பாடியை சேர்ந்த காவலாளி படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலாளி

வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார்.

வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி அமர்த்தப்பட்டிருந்தார். தினமும் ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பணம் எடுத்து செல்லும் வேனில் இவர் இரட்டை குழல் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்கு செல்வது வழக்கம்.

குண்டு பாய்ந்தது

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு வேனில் பணம் எடுத்து சென்றபோது, துரைசாமி பாதுகாப்பு பணியில் இருந்தார். துப்பாக்கியை கையில் பிடித்தபடி இவர் சென்றார். தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை சிக்னல் அருகே சென்றபோது திடீரென்று பிரேக் போட்டதால், வேன் குலுங்கியபடி நின்றது.

இதனால் துரைசாமியின் கைவிரல், துப்பாக்கி விசையில் பட்டு வெடித்தது. துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய குண்டு, துரைசாமியின் வலது கையில் பாய்ந்ததில் கை சிதைந்து பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துரைசாமி வேனுக்குள்ளேயே சாய்ந்துவிட்டார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் துரைசாமி அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் முத்தழகு, இன்ஸ்பெக்டர் கிரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடித்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். சிக்னல் அருகே வேனில் துப்பாக்கி குண்டு வெடித்த சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story