அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவல்


அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:30 AM IST (Updated: 12 Aug 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ஆனால் கடந்த வருடத்தைப் போல தென் மேற்கு பருவமழை ஏமாற்றி விடாமல் ஓரளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கிய போது தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் வட தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட சில வட மாவட்டங்களில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டு இதமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலசந்திரன் கூறியதாவது:–

தென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story