எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரசம் இல்லை அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல்


எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரசம் இல்லை அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல்
x
தினத்தந்தி 13 Aug 2017 5:45 AM IST (Updated: 13 Aug 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இடையே சமரசம் ஏற்படாததால், அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2 ஆக உடைந்த அ.தி.மு.க.வை மீண்டும் ஒன்றாக இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா) தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க. அம்மா) தரப்பிலும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேரடியாக சந்தித்து பேசுவதற்கு முன்பே கலைக்கப்பட்டது.

இதற்கு அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து டி.டி.வி.தினகரனை ஓரம் கட்டுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் காத்திருந்த நேரத்தில் தான், இரு அணிகளின் இணைப்பிற்காக தினகரன் 60 நாள் ‘கெடு’ அறிவித்தார்.

இந்த அறிவிப்பே அவருக்கு வினையாக மாறியது, அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் அ.தி.மு.க. (அம்மா) அணியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இது டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

இதையடுத்து அவசர அவசரமாக கடந்த 5-ந் தேதி அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு கூடுதல் புதிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் அறிவித்து, எடப்பாடி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

ஆனால் அவருக்கு பதில் அடி கொடுக்கும் வகையில், கடந்த 10-ந் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தி துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது. அவருக்கு அ.தி.மு.க.வினர் யாரும் கட்டுப்பட வேண்டியதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்த தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டி.டி.வி.தினகரன் குறித்து அதிரடி முடிவு மேற்கொள்ளப் பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தங்கள் அணியில் இணைவார்கள் என்றும், அ.தி.மு.க. ஒன்றாக மாறும் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நினைத்தனர்.

ஆனால் அதற்கான சூழ்நிலை உருவாகவில்லை. இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்க தேர்தல் ஆணையத்தில் ஒன்றுபட்ட அ.தி.மு.க. சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யலாம் என்ற அவர்களின் எண்ணத்திலும் மண் விழுந்தது.

இரு அணிகள் இணையும் பட்சத்தில் தனக்கு முதல்- அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புவதாகவும், கட்சியிலும் பொதுச்செயலாளருக்கு இணையான பதவியை வழங்க வேண்டும் என்று அவர் கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்-அமைச்சர் பதவியும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியும், அவரது ஆதரவாளர்களுக்கு 2 அமைச்சர் பதவியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் எங்களது அணியே உண்மையான அ.தி.மு.க. என்று அறிவிக்க வேண்டும் என்று புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளார்.

இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த செயல் பா.ஜ.க. மேலிடத்திற்கு அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனாலேயே ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படு கிறது.

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் பேசியுள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் குறித்து தன்னுடைய அதிருப்தியை அவர் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.

சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் முழுமையாக அ.தி.மு.க.வில் இருந்து விலக்கினால் தான் இரு அணிகள் இணைப்பு சுமுகமாக முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறது.

இதற்கிடையே டெல்லியில் இருந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்றார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர். சீரடியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இரு அணிகளின் இணைப்பு எந்த நிலையில் இருக்கிறது? என்று தொலைபேசி வாயிலாக தினத்தந்தி நிருபர் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

நாங்கள் ஏற்கனவே 2 நிபந்தனைகளை அவர்களிடம் தெரிவித்து இருக்கிறோம். இதில் ஒரு கோரிக்கையை மேலோட்டமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். முழுமையாக அவர்கள் நிறைவேற்றவில்லை. அவர்கள் 2 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அதனை தொண்டர்களும், மக்களும் நம்புபடியாகவும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் உறுதியான பதில் கிடைக்கும் வகையில் இருந்தால் இணைப்பிற்கான சாத்திய கூறுகள் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற 2 கோரிக்கைகள் நிறைவேறினால் தான் இரு அணிகளும் இணையும் என்று கூறப்படுகிறது.

Next Story