அன்புமணி ராமதாஸ் விவாத நிகழ்ச்சி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணிப்பு
அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொள்ளாமல் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
சென்னை,
தமிழக கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த அன்புமணி ராமதாஸ் நேற்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இதில் கலந்துகொள்ளாமல் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
‘தமிழக கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது’ என்று பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கைகள் மூலம் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு ‘அன்புமணி ராமதாசுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை நீக்கிவிட்டு வரட்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
எனினும் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த அன்புமணி ராமதாஸ் தீவிரமாக இருந்தார். அந்தவகையில் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்பேரவையில் நேற்று மாலை விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை அமைச்சர் செங்கோட்டையனுக்காக, டாக்டர் அன்புமணி ராமதாஸ் காத்திருந்தார். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் வராமல் புறக்கணித்துவிட்டார்.
பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் பேசியதாவது:-
தமிழக அரசில் பணியாற்றும் செயலாளர்களில் 90 சதவீதம் பேர் ஊழலில் சிக்கியவர்களாகவே இருக்கின்றனர். 10 சதவீதம் பேர் மட்டுமே நேர்மையாக இருக்கின்றனர். அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் நிலையில் அதிகாரிகள் இருந்துவிடக்கூடாது. உதாரணமாக கல்வித்துறை செயலாளராக இருக்கும் உதயச்சந்திரன் போல் நேர்மையான, திறமையான அதிகாரிகள் அரசில் அங்கம் வகிக்க வேண்டும்.
தமிழக கல்வித்துறை செயலாளராக சபீதா 6 ஆண்டுகள் அப்பதவியில் இருந்திருக்கிறார். அத்துறையில் இதுவரை 10 அமைச்சர்களை அவர் பதவிக்காலத்தில் சந்தித்து விட்டார். ஒருவர் ஒரு பதவியில் பல காலம் இருப்பதற்கு அவர் மிகுந்த திறமைசாலியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் ஊழலில் கொடிகட்டி பறக்க வேண்டும்.
கல்வித்துறையில் ஊழலின் அம்சமாக விளங்கி, அத்துறையின் மாண்பையையே கெடுத்துவிட்டார். இதுபோன்ற அதிகாரிகளை இத்தனை ஆண்டுகள் பதவியில் வைத்திருந்தது தலைமையின் குற்றம்.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கல்வித்துறையில் எங்களால் நிறைய மாற்றங்கள் செய்துகாட்ட முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். சுமையில்லாத, சுகமான, அறிவுப்பூர்வமான, சமச்சீரான, இலவசமான கல்வியை கொடுக்கமுடியும். மென்பொருள் வழி கல்வி சாத்தியம் என்பதை நிரூபிக்கமுடியும். சி.பி.எஸ்.இ. தரத்தை விட மேம்பட்ட கல்வியை அரசு சார்பில் கொடுக்கமுடியும். இதையெல்லாம் பா.ம.க. செய்துதர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாசிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பாராளுமன்றத்துக்கு நீங்கள் அடிக்கடி செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்:- மற்ற எம்.பி.க்களிடம் இதை நீங்கள் கேட்கவேண்டும். மற்ற எம்.பி.க்கள் 100 சதவீத வருகை இருந்தாலும் பணிகளில் ‘பெயில்’. நான் வருகையில் குறைவாக இருந்தாலும் மக்கள் பணியாற்றுவதில் ‘பாஸ்’.
கேள்வி:- அ.தி.மு.க.வின் அணிகள் இணைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- எத்தனை அணிகளாக பிரிந்தாலும் பாதிப்பு மக்களுக்கு தான். ஆனால் எல்லாமே பா.ஜ.க.வுக்கு நன்றாகவே தெரியும்.
கேள்வி:- நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
பதில்:- தி.மு.க-அ.தி.மு.க. மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையே...
மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story