ஐ.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: கொடைக்கானலில் வாகன சோதனை தீவிரம்


ஐ.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: கொடைக்கானலில் வாகன சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 13 Aug 2017 5:00 AM IST (Updated: 13 Aug 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவலை தொடர்ந்து கொடைக்கானலில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொடைக்கானல்,

தமிழகம் மற்றும் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 8 பேர் சேர்ந்து, கேரளாவில் முக்கிய பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் மன்சீத் மெகமூத், ஸ்வாலி முகமது, ரஷீத் அலி, சாப்வான், ஜாசிம் ஆகியோர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் மொய்னூதீன் பாராகடவத், அமீரகத்தில் இருந்து டெல்லிக்கு நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பலர் தலைமறைவாக இருக்கின்றனர். எனவே, அவர்கள் கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியில் பதுங்கி இருந்து வெளிநாட்டினரை தாக்கலாம் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏற்கனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றனர். கொடைக்கானலில் இருந்து வட்டக்கானல் செல்லும் சாலையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேற்று வட்டக்கானல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்ரேல் நாட்டினர் அதிக அளவில் வருவார்கள். எனவே, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Next Story