எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு கிராம உதவியாளர்கள் கோஷம்
சென்னையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட கூட்டத்தில், சம்பள உயர்வு கேட்டு கிராம உதவியாளர்கள் திடீரென கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை,
தமிழக வருவாய் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கங்களின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக வருவாய் துறை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், நில நிர்வாக ஆணையர் மோகன் பியாரே, வருவாய் நிர்வாக ஆணையர் கோ.சத்தியகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பேசினார்கள். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விழா பேரூரையாற்றினார்.
அப்போது அவர், ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம ஜமாபந்தி மற்றும் கணக்கு பராமரிப்புக்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் தொகையான ரூ.2,500 இனி ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், மின்னணு சான்றிதழ் வழங்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலும் 1 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்படும். நிலங்களை அளப்பதற்கு நவீன கருவிகள் வழங்கப்படும், தாலுகா அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களுக்கு 3ஜி, 4ஜி என்று விரைவாக தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு சாதனங்கள் வழங்கப்படும், நிலஅளவை துறையில் காலியாக உள்ள புல உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளால் கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டும் தான் பயன் அடைவார்கள். கிராம உதவியாளர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறி, விழாவில் கலந்து கொண்ட கிராம உதவியாளர்கள் ஆத்திரம் அடைந்து இருக்கையில் இருந்து எழுந்து கோஷம் எழுப்பினர்.
அப்போது, 4–ம் நிலை ஊழியர்களாக அறிவித்து, அலுவலக உதவியாளர்களுக்கு வழங்குவது போன்று சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூறி அனைவரும் கைகளை தூக்கி தொடர்ந்து கோஷம் போட்டனர். அவர்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அனைவரும் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
இதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வெளியேறினர்.