கர்நாடக அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல ஜி.கே.வாசன் அறிக்கை
கர்நாடக அரசு தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாமே என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கர்நாடக அரசு தமிழகத்திற்கு பாதிப்பில்லாத வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டலாமே என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. இந்த கருத்து தமிழக விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தற்போது கர்நாடக அரசுக்கு ஆதரவாக தெரிவித்திருக்கும் இந்த கருத்தானது ஏற்புடையதல்ல. சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவுப்படி செயல்படாத கர்நாடக அரசை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கண்டித்து, ஏற்கனவே அறிவித்த தீர்ப்பை மதித்து செயல்பட மீண்டும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனையாவது கர்நாடக அரசு மதித்து செயல்பட முன்வர வேண்டும்.
கர்நாடக அரசு காவிரி நதிநீரை தமிழகத்திற்கு முறையாக கொடுக்காமல், தவறான தகவல்களை அளித்து, தன்னிச்சையாக முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை மத்திய அரசு கண்டிப்பதோடு, நடுநிலையோடு செயல்பட்டு, தமிழகத்துக்கான தண்ணீரை திறந்துவிட வலியுறுத்த வேண்டும்.
மேலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story