சினிமா சூட்டிங் பணத்தை பிரிப்பதில் தகராறு மீனவர்கள் பயங்கர மோதல்; 2 பேர் வெட்டிக்கொலை
சினிமா சூட்டிங் பணத்தை பிரிப்பதில் தகராறு மீனவர் கிராமங்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யபட்டனர்.
செய்யூரை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம், தண்டு மாரியம்மன் குப்பம், ஊத்துக்காட்டான் குப்பம் மீனவ கிராமங்கள் உள்ளன.
ஊத்துக்காட்டான் குப்பத்தில் உள்ள புராதன சின்னமான ஆலமரக் கோட்டை பகுதியில் அடிக்கடி சினிமா சூட்டிங் நடப்பது வழக்கம். சினிமா சூட்டிங் குழுவினர் ஊத்துக்காட்டான் குப்பத்துக்கு குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்து வந்தனர். அதனை அவர்கள் அருகில் உள்ள தண்டு மாரியம்மன் குப்பத்தினருடன் பிரித்து கொண்டனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊத்துக்காட்டான் குப்பத்தில் மீண்டும் சினிமா சூட்டிங் நடைபெற்றது. அப்போது சினிமா குழுவினர் கொடுக்கும் பணத்தை தங்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று கடப்பாக்கம் குப்பத்தினர் கேட்டதாக தெரிகிறது.
இதனால் கடப்பாக்கம் குப்பத்தினருக்கும், ஊத்துக்காட்டான் குப்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து இன்று இரண்டு மீனவ கிராமத்தினர் இடையே சமாதான பேச்சு நடத்த கிராம தலைவர்கள் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் ஊத்துக்காட்டான் குப்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டு கட்டையுடன் கடப்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்தனர்.
அவர்கள் அங்கிருந்த மீனவர்களை சரமாறியாக தாக்கினர். மேலும் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். படகுகளுக்கும் தீ வைக்கப் பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த கடப்பாக்கம் குப்பத்தினர் ஏராளமானோர் ஒன்று திரண்டனர். உடனே மோதலில் ஈடுபட்ட ஊத்துக்காட்டான் குப்பத்தினர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் அரிவாள் வெட்டி காயம் அடைந்த கடப்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் (வயது28) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ராமகிருஷ்ணன் (26), கிறிஸ்டோபர், சக்திவேல், ராஜாராம், முருகன், மாயகிருஷ்ணன், குமார், செல்வம், அருள்தாஸ், விக்னேஷ், இசைவாணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். மேலும் கிறிஸ்டோபர், சக்திவேல் ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மோதலில் கடப்பாக்கத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்து உள்ளன. இதே போல் ஊத்துக்காட் டான் குப்பத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. இரு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கடப்பாக்கம் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் மோதலில் ஈடுபட்டு சூறையாடியதாக ஊத்துக் காட்டான் குப்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். மீனவ கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. தேன்மொழி, போலீஸ் சூப்பிரண்டு சாந்திமதினி ஆகியோர் மீனவ கிராமங்களில் ஆய்வு செய்தனர். மோதலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோதலை தடுக்க மீனவ கிராமங்கள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story