நீட் தேர்வினால் மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை
நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு வரையில் போராடிய அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
செந்துறை,
நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்படும் மருத்துவ மாணவர் சேர்க்கையால் டாக்டராகி சேவை செய்ய வேண்டும் என்கிற தனது கனவு தகர்ந்து போனதை எண்ணி, மனதளவில் பாதிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்திருந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் மூழ்க செய்து உள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த அனிதா சிறுவயதில் இருந்தே மருத்துவப்படிப்பு படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவுடனேயே பள்ளி படிப்பை படித்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள பிளோமினாள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். பிளஸ்-2வில் அவர், 1,176 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் கட்-ஆப் 196.75 ஆகும். இதனால் தனக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து விடும் என்ற கனவுடன் இருந்தார். இருப்பினும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதை அறிந்த அனிதா, அந்த தேர்வை எழுத தயாரானார். தேர்விலும் பங்கேற்றார். மாநில அரசின் பாடத்திட்டப்படி படித்திருந்த அனிதா நீட் தேர்வு கடினமாக இருந்ததால், மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வில் தேர்வாகும் வகையில் கட்-ஆப் மதிப்பெண் கிடைக்குமா என குழப்பத்துடனேயே இருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் அனிதா பொதுநல மனுவும் தாக்கல் செய்திருந்ததார். இவருடன் சேர்ந்து மேலும் சில மாணவ, மாணவிகளும் மனுதாக்கல் செய்திருந்தனர். சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு கோணங்களில் மாணவர்களின் நலன் கருதி விசாரணை நடந்தது. அதன் பின்னர் இது தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை டெல்லி சுப்ரீம் கோர்ட்டு நடத்தியது.
பின்னர் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து நீட் தேர்வில் பெற்ற கட்-ஆப் மதிப்பெண்ணை வைத்து தமிழகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நீட் தேர்வில் 700க்கு 86 மதிப்பெண்கள் எடுத்திருந்த கிராமபுற மாணவியான அனிதா தனக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்காததை எண்ணி வேதனை அடைந்தார். டாக்டர் ஆகும் லட்சியம் நீட் தேர்வால் தடைபட்டு விட்டதே என உறவினர்களிடமும், தனது சக தோழிகளிடமும் அனிதா கூறி வேதனை பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு அனிதா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட மகளின் உடலை பார்த்து அவருடைய தந்தை கதறி துடித்தார். உறவினர்களும் அங்கு கூடி கதறி அழுதனர். அனிதாவின் தாய் ஆனந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
போனதால் தந்தை-சகோதரர்களின் அரவணைப்பிலே அனிதா இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவி அனிதாவின் மரணம் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்தது போன்ற மனவேதனையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story