நீல திமிங்கல விளையாட்டு: கையை கத்தியால் அறுத்துக்கொண்ட 6-ம் வகுப்பு மாணவன்
நீல திமிங்கல விளையாட்டை ஆடிய 6-ம் வகுப்பு மாணவன் கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டான்.
பரமத்தி வேலூர்
உயிரை எடுக்கும் விளையாட்டு
நீல திமிங்கலம் (புளூவேல்) என்ற இணையதள விளையாட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் உயிர்களை தன் கோரப்பசிக்கு இரையாக்கி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த விளையாட்டை ஆடிய 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் நீல திமிங்கல விளையாட்டால் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கையை அறுத்துக்கொண்டான்
பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியை சேர்ந்த 11 வயது நிரம்பிய மாணவன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
கடந்த 31-ந் தேதி இரவு இவன் செல்போனில் நீல திமிங்கலம் விளையாட்டை வெகுநேரம் ஆடியுள்ளான். நேற்று முன்தினம் காலையும் விளையாட்டை தொடர்ந்தான். அப்போது அந்த விளையாட்டில் வந்த கட்டளைப்படி அவன் பென்சில் சீவும் சிறிய கத்தியால் தனது வலதுகை மணிக்கட்டையை லேசாக வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வீட்டில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டான்.
ஆசிரியர்கள் அறிவுரை
பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அவனது கையில் காயம் இருந்ததை பார்த்து அது குறித்து கேட்டு உள்ளனர். முதலில் உண்மையை கூற மறுத்த அவன் ஆசிரியர்கள் தொடர்ந்து வலி யுறுத்தியதால் நீல திமிங்கல விளையாட்டை ஆடியபோது அதில் வந்த கட்டளைப்படி கையை லேசாக அறுத்துக் கொண்டதாக கூறி உள்ளான்.
இதையடுத்து அந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவனுக்கும், மற்ற மாணவர்களுக்கு நீல திமிங்கல விளையாட்டை விளையாடக் கூடாது என ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.
தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் அந்த மாணவனை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இதுபற்றி பரமத்தி வேலூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story