திருச்சியில் அடுக்குமாடி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்


திருச்சியில் அடுக்குமாடி விபத்து:  பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்
x
தினத்தந்தி 4 Sept 2017 5:30 AM IST (Updated: 4 Sept 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

4 பேர் பலி

திருச்சி கிழக்கு வட்டம், டவுன் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்ததில், 2-வது தளத்தில் வசித்து வந்த கார்த்திக், அவருடைய மகன் ஹரீஸ், பழனி, அவருடைய மனைவி ராஜாத்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக், ஹரீஸ், பழனி, ராஜாத்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் 4 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்த மடைந்தேன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தைக்கு ரூ.5 லட்சம்

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், ஆஸ்பத்திரிக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் பலியான பழனி என்பவரின் 1½ வயது குழந்தை பரமேஸ்வரி உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தையின் எதிர்கால நலன் கருதி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும், இந்த தொகையை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் ரூ.4 ஆயிரத்து 62-யை குழந்தை பரமேஸ்வரியின் பராமரிப்பு செலவிற்காக கிடைக்கப்பெறும்.

நிவாரணம்

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக், ஹரீஸ் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், அதாவது ரூ.4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.


Next Story