ஆவடியில் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்கா : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஆவடியில் பல்நோக்கு தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும், ஆட்சியையோ, அ.தி.மு.க.வையோ யாரும் தொட்டு பார்க்க முடியாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள பஞ்செட்டியில், தமிழக அரசு சார்பில் நேற்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் க.பாண்டியராஜன், பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா மேடையில், எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததுடன், ரூ.51 கோடியே 33 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.76 கோடியே 46 லட்சம் மதிப்பிலான 2004 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.
முன்னதாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பு தபால் தலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். மேலும், அங்கு நடைபெற்ற எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பல்வேறு திட்டங்கள்
ஜெயலலிதாவினுடைய அரசு பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை தமிழகத்திற்கு தந்தார்கள். ஜெயலலிதா 16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியைத் தந்தார்.
தமிழகத்திலே அ.தி.மு.க. ஆட்சியின் இருபெரும் தலைவர்கள் 27 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்திலே இருந்து பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு அளித்த ஆட்சி அ.தி.மு.க.
இறைவன் கொடுத்த கொடை
தமிழகத்திலே அதிக அளவிலே ஆட்சி செய்த அரசு அ.தி.மு.க. அரசு என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இருபெரும் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை இந்த இயக்கத்திற்கு. இந்த இருபெரும் தலைவர்களால் தான் இன்று தமிழகம் தலைநிமிர்ந்து இருக்கிறது. இருபெரும் தலைவர்களுடைய உழைப்பு நிலைத்து நிற்கின்ற வரை இந்த ஆட்சியையோ, கட்சியையோ யாரும் தொட்டுப் பார்க்க முடியாது என்பதை சுட்டிக் காட்டுகின்றேன்.
பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் என்னிடத்திலே வைத்தார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் - எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அறிவிப்புகள் வருமாறு:-
திருத்தணியில் புதிய பஸ் நிலையம்
* அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள திருத்தணி நகராட்சியில் தினந்தோறும் சுமார் 12 ஆயிரம் நபர்களுக்கு மேல் வந்து செல்வதாலும், பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகமாவதாலும் தனியார்-பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய பஸ் நிலையம் திருத்தணி நகராட்சியில் அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பேரூராட்சி பகுதி மிக விரைவாக வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியானதால், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், பொது சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையிலும், பொன்னேரி பேரூராட்சியில் புதியதாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டு தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஆவடி மற்றும் மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் வட்டாட்சியருக்கான குடியிருப்பும் கட்டப்படும்.
* திருவள்ளூர் நகரைச் சுற்றிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்தும், ரெயில் நிலையத்தில் இருந்தும் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே பிரதான சாலை வழியாக பயணிக்க நேரிடுகிறது.
இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி திருவள்ளூர் நகரைச் சுற்றி ஈக்காடு சொசைட்டி நகர் முதல் காக்களூர் சாலை வரை 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுப்பாதை அமைக்கப்படும்.
பல்நோக்கு தொழில்நுட்ப பூங்கா
* சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ள, வேகமாக வளர்ந்து வரும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 15 ஊராட்சிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 22 சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் தண்டுரை கிராமத்தில் உள்ள (பட்டாபிராம்) தமிழ்நாடு அரசின் சதர்ன் ஸ்ட்ரக்சுரல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் ஒரு பல்நோக்கு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் திருவொற்றியூர் ஆகிய 3 வட்டங்களின் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் பொன்னேரி வட்டம், பொன்னேரி பகுதியில் மீனவ சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்.
* திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் பள்ளிப்பட்டு வட்டத்தில் இருந்து ஆர்.கே.பேட்டை பகுதியை பிரித்து புதிய 30 வட்டம் உருவாக்க விடுத்த கோரிக்கையினை அரசு பரிசீலித்து ஆவன செய்யும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story