மாணவி அனிதா தற்கொலை: பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மன்னிப்பு கேட்டார்


மாணவி அனிதா தற்கொலை: பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 5 Sept 2017 5:00 AM IST (Updated: 5 Sept 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்ததற்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மன்னிப்பு கேட்டார்.

கரூர்,

கரூர் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிக்கான பூமி பூஜை சணப்பிரட்டியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. (அம்மா அணி) கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் அரசு மருத்துவ கல்லூரி இடப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தேவையான 16½ ஏக்கர் பரப்பளவு இந்த இடத்தில் உள்ளது. மருத்துவமனை 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு தகுந்தாற்போல இடவசதி உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை ஒரு வருட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.

‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு தேவையில்லை என அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசும் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என வலியுறுத்தியது. இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் ‘நீட்’ தேர்வை நடைமுறைப்படுத்த வேண்டியதாகி விட்டது. அதன்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுசீராய்வு செய்வோம். இதுகுறித்து தற்போது வேறு எதுவும் வாக்குறுதி கொடுக்க முடியாது. ‘நீட்’ தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்பது தான் எங்கள் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் குடும்பத்தினர் தமிழக அரசின் நிவாரண தொகையை வாங்க மறுத்தது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது தம்பிதுரை கூறுகையில், “அரியலூர் மாவட்டம் செந்துறையில் மாணவி அனிதா தற்கொலை செய்த சம்பவம் எங்களுக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. மருத்துவ படிப்பில் சேர முடியாததால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடாது. ஒரு ஆண்டு காத்திருந்து அடுத்த ஆண்டு சேர்ந்திருக்கலாம். அனிதா தற்கொலைக்கு நாங்கள் (அ.தி.மு.க. அம்மா கட்சி) வருத்தமடைகிறோம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Next Story