முதல்-அமைச்சர் நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி


முதல்-அமைச்சர்  நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு அரசுக்கு மெஜாரிட்டியை பெறுவதில் இழுபறி
x
தினத்தந்தி 6 Sept 2017 5:45 AM IST (Updated: 6 Sept 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்றனர்.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கூட்டி இருக்கிறார்கள்.

இந்த கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

அதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கொறடா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 109 பேர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டார்.

கூட்டத்தில், அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று, அவர் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளையும் முழுமனதுடனும், உள்ள உறுதியுடனும் ஏற்றுக்கொள்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன் முன்மொழிந்தார்.

அதனைத்தொடர்ந்து, பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி 5 ஆண்டுகளும் தொடர வேண்டும். உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் ஏதாவது குறை இருந்தால், அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மூத்த அமைச்சர்களிடம் தெரிவியுங்கள்” என்று கூறியதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 11.45 மணியளவில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக 50 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 46 மாவட்ட செயலாளர் கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். பங்கேற்காத 4 மாவட்ட செயலாளர்கள் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பட்டியலில் உள்ளதுபடி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களையும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

அதன்பின்னர், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுடன் பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும், சிறப்பு அழைப்பாளர்களாக யார் யாரை அழைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர், மதியம் ஒரு மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கட்சிக்கு சட்ட சபையில் எம்.எல்.ஏ.க்களின் பலம் 135 ஆக இருந்தது. இதில், 21 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளனர். 3 கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு? என்பதை இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதைவைத்து பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே தற்போது உள்ளது. மெஜாரிட்டியை நிரூபிக்கும் சூழ்நிலை வந்தால், அதில் சபாநாயகருக்கு ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படாது. இதனால் 110 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது.

அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றால், மேலும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

கடந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி நடைபெற்ற அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் கூட்டத்தின்போது, 71 எம்.எல்.ஏ.க்களே கலந்துகொண்டனர். 39 எம்.எல்.ஏ.க் கள் கலந்துகொள்ளாத நிலையில், மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து, கடந்த மாதம் 31-ந்தேதியும், இம்மாதம் 1-ந்தேதியும் எடப்பாடி பழனிசாமி சமரசம் செய்தார்.

அந்த சமரசத்தை ஏற்றுக்கொண்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளனர். என்றாலும், மெஜாரிட்டியை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால், தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது.

Next Story