‘நீல திமிங்கல விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை’ தமிழக அரசு எச்சரிக்கை


‘நீல திமிங்கல விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை’ தமிழக அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2017 5:15 AM IST (Updated: 6 Sept 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

நீல திமிங்கல விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

பிறரை தற்கொலைக்கு தூண்டுவது சட்டத்திற்கு புறம்பான செயல் மட்டுமல்லாது, தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் நீல திமிங்கல விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“நீல திமிங்கல சவால்” என்ற பெயரில் நேரலை விளையாட்டு ஒன்று இணையதளத்தில் பரவி வருகின்றது. அதை விளையாடுபவர்களைச் சவால்கள் என்ற பெயரில் தூண்டி விட்டு அவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி, கடைசி கட்ட சவாலாக விளையாடுபவரையே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு இந்த விளையாட்டு தள்ளுகிறது.

இந்தியா உள்பட உலக நாடுகளில் தற்கொலை இறப்புகள் இவ்விளையாட்டால் நிகழ்ந்து வருகிறது. அண்மையில் மதுரை மாவட்டத்தில் ஒரு இளைஞரின் உயிர் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

“நீல திமிங்கல சவால்” என்ற விளையாட்டானது இணையதளம் அல்லது அதிகாரபூர்வ விளையாட்டு களஞ்சியத்திலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்யக்கூடிய, தொழில்நுட்ப ரீதியான செயலியை அடிப்படையாக கொண்ட ஒரு விளையாட்டல்ல.

சமூக ஊடக நிர்வாகம் அளிக்கும் நேரலை விளையாட்டு குழுமங்கள், குறுஞ்செய்தி மையங்கள் மற்றும் இதர நேரலை சமூக தகவல் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளைச் செய்து முடிக்கக்கூடிய விளையாட்டாகும். இது மட்டுமின்றி, வாலிப வயதினரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு 50 நாட்களுக்கான ஒரு தொடர் பணிகளை செய்து முடிக்கக் கட்டளையிடுகிறது. இறுதியில் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் விளையாட்டாகும்.

ஓர் அமைதியான இல்லம், ஒரு திமிங்கல கடல், அதிகாலை 4.20 மணிக்கு என்னை எழுப்பு போன்ற பல்வேறு பெயர்களில் இவ்விளையாட்டு புழக்கத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இவ்விளையாட்டைப் பெரும்பாலும் ‘ஸ்மார்ட்போன்’ அல்லது அதைப் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தித்தான் விளையாட முடியும்.

12 முதல் 19 வயதுடைய சிறுவர், சிறுமியர்கள் தான் இணையதளத்தில், அதிகபட்சமாக, நீல திமிங்கல சவால் மற்றும் அதுபோன்ற இன்னும் பிற விளையாட்டுகளால் ஈர்க்கப்படும் வயதினராக உள்ளனர் என்று தெரியவருகிறது.

இது போன்ற விளையாட்டுக்களை நேரலையில் விளையாடும் சிறுவர்களை தனிமையை விரும்புபவர்களாகவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்திக்கொள்வார்கள். மேலும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவது பற்றி அடிக்கடி பேசுபவர்களாகவும், மரணம் குறித்து விவாதிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தகைய சிறார்களின் உணவு சாப்பிடும் முறையிலும். தூங்கும் பழக்கத்திலும் மாறுபாடுகள் தென்படும்.

எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறுவர்களின் மனநிலையில் ஏதாவது வித்தியாசமான மாற்றம் தெரிகிறதா என்றும், மற்றவர்களுடன் பேசுவது குறைந்து வருகிறதா அல்லது முற்றிலும் நின்றுபோகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும். கல்வியில் நாட்டமின்றி, மதிப்பெண்கள் குறைந்துள்ளனவா என்றும், அவர்களது நடத்தையை கூர்ந்து கவனித்து வரவேண்டும். அத்தகைய போக்குகள் நேரடி தீய விளையாட்டுகளில் அவர்களது மனம் ஈடுபாட்டுடன் உள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும்.

இந்த விளையாட்டை சிறுவர்கள் எவராவது விளையாடுவது குறித்து தகவல் தெரிந்தால், அவர்கள் இணையம் அல்லது அது போன்ற சாதனத்தை பயன்படுத்தக்கூடாது என்று அவர்களை தடுக்க வேண்டும். உள்ளூர் காவல் நிலையத்தினரிடம் அதுகுறித்து தகவல் அளிக்கலாம். இதுதவிர, அரசு மருத்துவமனையினர், அலுவல்சாரா அமைப்புகள் மூலமாக அவ்விளையாட்டை விளையாடும் சிறுவர்களுக்கு உளவியல் ரீதியான அறிவுரைகளும் வழங்கப்பட வேண்டும்.

நீல திமிங்கல சவால் விளையாட்டு தொடர்பான நேரடி இணைப்புகளை வேறு பிற நேரலை இணைப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இணைய உபயோகிப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்திய சட்டப்படி இவ்விளையாட்டு மூலமாக பிறரை தற்கொலைக்கு தூண்டுவது சட்டத்திற்கு புறம்பான செயலும் மற்றும் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி இவ்விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் பரபரப்பான குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் சட்டப்படி தண்டிக் கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story