மாணவர் சேர்க்கை நடந்தாலும் தமிழக மக்கள் நீட்டை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல டாக்டர் ராமதாஸ் அறிக்கை
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தாலும் தமிழக மக்கள் நீட்டை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசின் நீட் சட்டத்திற்கு பணிந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவற்றை மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு தாரைவார்த்துள்ள நிலையில், நீட் சட்டப்படி நடக்க முடியாது என்று கூறி நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி கைவிட்டிருக்கிறது. இந்த துணிச்சலான நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி அதன் சேவைக் கட்டமைப்பை பாதுகாக்க மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து போராடுவதைப் போன்று தமிழகமும் அதன் மருத்துவச் சேவைக் கட்டமைப்பை பாதுகாக்க இதே போன்ற எதிர்ப்பு வடிவத்தை கையிலெடுத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று விட்டது என்பதாலேயே தமிழக மக்கள் நீட்டை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் அல்ல. இன்னும் கேட்டால் நீட் தேர்வு முறை செல்லும் என உச்சநீதிமன்றமே இன்னும் தீர்ப்பளிக்கவில்லை.
ஒவ்வொரு மாநிலமும் அதன் மருத்துவ சேவைக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அதற்கு கல்வியையும், மருத்துவக் கல்வியையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு அரசியல் ரீதியில் அழுத்தம் கொடுத்து மாநில உரிமைகளை வென்றெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story