நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் இலங்கை கடற்படையினர் மீது புகார்


நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் இலங்கை கடற்படையினர் மீது புகார்
x
தினத்தந்தி 7 Sept 2017 3:30 AM IST (Updated: 7 Sept 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை அறுத்து எறிந்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த செல்வமணி, கோவிந்தன், ரவிக்குமார், செல்வகுமார், வெற்றிவேல் ஆகிய 5 மீனவர்கள் ஒரு படகிலும், மற்றொரு படகில் ஆனந்தன், கலைமாறன், கதிரவன், சரவணன் ஆகிய 4 பேர் என மொத்தம் 9 பேர் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வேதாரண்யம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, இரும்பு கம்பி, கட்டையால் அவர்களை தாக்கினர். மேலும், அவர்கள் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர்.

அதிகாரிகள் விசாரணை

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் அந்த வழியாக 2 படகில் வந்த இலங்கை மீனவர்கள், வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து வேதாரண்யம் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர்.

பின்னர் இதுகுறித்து மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் மற்றும் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் மீனவர்கள் புகார் கொடுத்தனர். இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story