சென்னையில் 104 ரெயில் நிலையங்களுடன் புதிய மெட்ரோ ரெயில் பாதை


சென்னையில் 104 ரெயில் நிலையங்களுடன் புதிய மெட்ரோ ரெயில் பாதை
x
தினத்தந்தி 7 Sept 2017 4:00 AM IST (Updated: 7 Sept 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

108 கிலோ மீட்டர் தூரத்துக்கு 104 ரெயில் நிலையங்களுடன் புதிய மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னையில் ஐ.டி. நிறுவனங்களை இணைக்கும் வகையில் 108 கிலோ மீட்டர் தூரத்துக்கு 104 ரெயில் நிலையங்களுடன் புதிய மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதனை 10 ஆண்டுகளில் முடித்து போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கந்தன்சாவடி, பெருங்குடி, வெங்கட் நாராயணசாலை, நாவலூர், கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, சிறுசேரி, செம்மஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஐ.டி. நிறுவனங்கள் உள்ள சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் இந்தப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதற்காக 108 கிலோ மீட்டர் தூரத்துக்கு 104 ரெயில் நிலையங்களுடன் புதிய ரெயில் பாதையை வடிவமைத்து உள்ளது. இந்தப்பாதையில் அடுத்த ஆண்டு (2018) பணியை தொடங்கி 10 ஆண்டுகளில் முடித்து போக்குவரத்தை முழுமையாக தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகரில் 70 முக்கிய ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் கலை அறிவியியல் கல்லூரிகள், தேசிய ஆய்வகங்கள் உள்ளன. இவற்றின் அருகில் மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க முடியும். இதனால் போக்குவரத்து நெருக்கடியையும் முற்றிலுமாக குறைக்க முடியும்.

மாதவரம் பால்பண்ணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை இந்தப்பாதை அமைய இருக்கிறது. இதன் மூலம் வடசென்னையையும், தென்சென்னையையும் இணைக்கும் வகையில் இந்தபாதை அமையும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை மாநகரில் முற்றிலுமாக போக்குவரத்து நெருக்கடி குறையும்.

கொளத்தூர், அண்ணாநகர், மதுரவாயல், வளசரவாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் மற்றும் பெரும்பாக்கம் போன்ற தென்மேற்கு பகுதிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து முக்கிய ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story