கடலில் குதித்த மும்பை இளம்பெண் மீட்பு பொதுமக்கள் காப்பாற்றினர்


கடலில் குதித்த மும்பை இளம்பெண் மீட்பு பொதுமக்கள் காப்பாற்றினர்
x
தினத்தந்தி 7 Sept 2017 2:30 AM IST (Updated: 7 Sept 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவான்மியூர் கடலில் குதித்து மும்பை இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை பொதுமக்கள் காப்பாற்றினார்கள்.

சென்னை,

சினிமாவில் நடப்பது போன்ற பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை திருவான்மியூர் கடற்கரை பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான பேர் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செய்கிறார்கள். எப்போதும் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

நேற்று காலையிலும் அதுபோல் ஏராளமான பேர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் படுத்துக்கிடந்த ஒரு பெண் திடீரென்று கடலில் குதித்துவிட்டார்.

கடல் அலை அவரை இழுத்துச் சென்றது. அந்தப்பகுதியில் இளநீர் வியாபாரம் செய்யும் பெருமாள் என்பவர் இதைப்பார்த்துவிட்டார். அவர் உடனடியாக கூச்சல் போட்டபடி கடலில் குதித்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடினார். அவரது சத்தம் கேட்டு நடைபயிற்சி செய்து கொண்டிருந்த பொதுமக்களும் கூட்டமாக திரண்டு வந்தனர்.

கடலில் குதித்த இளம்பெண்ணை பொதுமக்களும், இளநீர் கடைக்காரரும் சேர்ந்து காப்பாற்றினார்கள். கரைப்பகுதிக்கு அவரை அழைத்து வந்தனர். அப்போது அந்த இளம்பெண், ‘என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? என்று பொதுமக்களை பார்த்து கதறி அழுதார்.

நான் ஏற்கனவே இதுபோல் இரண்டு முறை உயிரை மாய்த்துக் கொள்ள கடலில் குதித்தேன். என்னை காப்பாற்றி விட்டார்கள். இப்போதாவது உயிரை விடலாம் என்று வந்தேன். இந்தமுறையும் காப்பாற்றி விட்டீர்களே’ என்று அந்த இளம்பெண் ஓவென்று கூச்சலிட்டார்.

அந்த இளம்பெண் மும்பையைச் சேர்ந்தவர். சென்னையில் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். நீலாங்கரையில் வாடகைக்கு அறை எடுத்து அதில் தங்கியுள்ளார். அவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாக தெரிகிறது.

தற்கொலை செய்து கொள்ள துடிப்பது ஏன் என்று அவரை காப்பாற்றிய பொதுமக்கள் கேட்டனர், ‘அது ரகசியம்’ ‘உங்களிடம் என்னால் சொல்ல முடியாது’ ‘பெண்களிடம்தான் சொல்ல முடியும்’ என்று அந்த இளம்பெண் குறிப்பிட்டார்.

அந்த இளம்பெண் கடலில் குதித்ததும் திருவான்மியூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் காலதாமதாக அங்கு வந்தனர். காப்பாற்றப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

திருவான்மியூர் கடற்கரை பகுதியில் போலீஸ் ‘பூத்’ ஒன்று உள்ளது. அந்த ‘பூத்’தில் போலீசார் யாரும் இருப்பதில்லை என்றும், அது பூட்டிக் கிடக்கிறது என்றும், தினமும் நூற்றுக்கணக்கான பேர் நடைபயிற்சி மேற்கொள்ளும் திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு போலீசார் ரோந்து செல்லவில்லை என்றும், அங்கு சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் குறை கூறினார்கள்.

பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து தென்சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கனிடம் எடுத்து கூறப்பட்டது. அவர் உடனடியாக திருவான்மியூர் கடற்கரை போலீஸ் ‘பூத்’தில் போலீசாரை பணியமர்த்த உத்தரவிட்டார்.

திருவான்மியூர் கடற்கரை பகுதியில் தினமும் போலீசார் ரோந்து செல்லவும் ஆணை பிறப்பித்தார்.

Next Story