ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை


ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
x
தினத்தந்தி 7 Sept 2017 3:30 PM IST (Updated: 7 Sept 2017 3:30 PM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரை,

ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று (7-ந் தேதி) முதல் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் -களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இறுதியாக ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமியுடன் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்று செயல்படுத்த அக்டோபர் 15-ந் தேதி வரை காலம் அவகாசம் தர வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது.

இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் முரண்பட்ட கருத்துக்கள் நிலவியது. முதல்வரின் கோரிக்கையை ஏற்று கொள்வதாக ஒரு சில நிர்வாகிகள் தெரிவித்தனர்.சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர். இதனால் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 2 ஆக உடைந்தது.

அரசு ஊழியர் சங்கம் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கழகம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்கள் பங்கேற்றன.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர் 

இதற்கிடையில், மதுரை ஐகோர்ட் கிளையில், அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. 

வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேலைநிறுத்தம் இல்லாத வேறு முறைகளை கையாளலாம். பல்வேறு வழிமுறைகள் வழிகள் உள்ளன. போராட்டத்தால் கல்வி, நிர்வாகம் முடங்கும். நிர்வாகம், மருத்துவம், கல்வி போக்குவரத்து பாதிக்கும் வகையில் போராடக்கூடாது. மாணவர்கள் நலனையும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனக்கூறி, தமிழக அரசு, அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது. 


Next Story