ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் அரிப்பு: சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் அரிப்பு: சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Sept 2017 2:45 AM IST (Updated: 8 Sept 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதால் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

ஜோலார்பேட்டை,

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் அரிப்பு ஏற்பட்டதால் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி அரிப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கிருந்த ஜல்லிக்கற்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் தண்டவாளம் சேதமடைந்தது. தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் உடனடியாக கண்டறியப்பட்டதால், ரெயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம் மார்க்கமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சென்னை மெயில், பழனி எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், காவிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு ரெயில்வே ஊழியர்கள் சேதம் அடைந்த தண்டவாளத்தை சரி செய்தனர். அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டனர். இதையடுத்து ரெயில்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

அப்போது ரெயில்கள் அனைத்தையும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. நேற்று மதியம் 2 மணிக்கு பிறகு தண்டவாளங்கள் முழுவதும் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரெயில்கள் வழக்கமான வேகத்தில் சென்றன.

Next Story