கவர்னருடன், டி.டி.வி. தினகரன் சந்திப்பு எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தினார்


கவர்னருடன், டி.டி.வி. தினகரன் சந்திப்பு எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தினார்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் வித்யாசாகர் ராவை, டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சென்னை,

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்்.

அதனை தொடர்ந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் டி.டி.வி. தினகரன் தங்கவைத்தார். இந்த நேரத்தில் டி.டி.வி. தினகரனுக்கு மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 21 ஆக உயர்ந்தது.

டி.டி.வி. தினகரன் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் நிகழாததாலும், அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு 2 முறை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாலும் சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் சோர்வும், மனக்குழப்பமும் அடைந்தனர். அவர்களில் சில எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டு, திரும்பி வந்தனர்். எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்பட்டுள்ள கலக்கத்தை போக்க டி.டி.வி. தினகரனே புதுச்சேரி சென்று அவர்களுடன் பேசினார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்தநிலையில், கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து பேச டி.டி.வி. தினகரன் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மதியம் 12.50 மணிக்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு இருந்தது. கவர்னரை சந்திக்க டி.டி.வி. தினகரன் நேற்று மதியம் 12.15 மணிக்கு வந்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் 6 எம்.பி.க்கள் வந்தனர்.

12.50 மணிக்கு கவர்னரை, டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பின் போது டி.டி.வி. தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்து நிரூபிக்க முதல்-அமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு கவர்னர் தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

நல்ல முடிவு

பின்னர் டி.டி.வி. தினகரன் தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆட்சியை தொடர செய்தால் குதிரை பேரம் தான் வரும். பெரும்பான்மையை இந்த ஆட்சியை இழந்து விட்டதால் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கவர்னரை கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர் நடப்பதை நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் கொடுத்த மனுவை நான் நிராகரிக்கவில்லை. விரைவில் நல்ல முடிவை எடுப்பேன் என்று எங்களிடம் தெரிவித்தார்.

ஒருவர் போனால், 3 பேர் வருவார்கள்

எங்கள் அணியில் இருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்று விட்டதாக கூறுகிறார்கள். இன்றைக்கு (நேற்று) காலையில் கூட அவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். பதவியை பறித்து விடுவதாக என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறினார். அதற்கு நான் உரிய நேரத்தில் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினேன். சிலர் பயப்படுவது இயற்கை. பாதாளம் வரை எது பாயுமோ அது அவர் மீது பாய்ந்து இருக்கிறது. எங்கள் சிலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் அங்கே இருக்கிறார்கள். தேவைப்படும்போது அவர்கள் வெளிப்படுவார்கள்.

ஒருவர் சென்றிருக்கிறார். இங்கே 3 பேர் வருவார்கள். மூவேந்தர்கள் என்று சொல்லக்கூடியவர்களில் ஒருவர் இங்கேயே இருக்கிறார். அவர்களை அழைக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். இன்றைக்கு தேவையாகி விட்டது. அவர்களின் பெயர்களையும் மனுவில் இணைத்து கொடுத்து இருக்கிறோம். மற்ற இருவர் இங்கே வராது குறித்து அவர்கள் கூறுவார்கள்.

மக்கள் விரும்புகிறார்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய துரோக கும்பலை கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

அனிதாவின் தந்தையான அந்த கூலி தொழிலாளிக்கு இந்த அரசின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்தால், அறிவிக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பி வைத்து இருப்பார். அதே நிலை தான் தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.

இந்த முதல்-அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் உட்கார வைத்தவர்கள் நாங்கள். இதை மக்கள் அறிவார்கள். இந்த அரசை பா.ஜ.க. ஆட்டுவிக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story