குடும்பநல நீதிமன்றங்கள் ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


குடும்பநல நீதிமன்றங்கள் ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Sept 2017 1:33 AM IST (Updated: 9 Sept 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப நல நீதிமன்றங்கள் ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

ஜீவனாம்சம் வழங்குவதற்காக பின்பற்றப்படும் பழைய நடைமுறையில் இருந்து மாறி, குடும்ப நல நீதிமன்றங்கள் ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

கனடா நாட்டில் பணியாற்றி வரும் கணவனிடம், ஜீவனாம்சம் தொகையை அதிகமாக பெற்றுத் தரும்படி சேலத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், ‘மனுதாரருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று கனடா நாட்டில் வாழும் அவரது கணவருக்கு சேலம் குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கீழ் கோர்ட்டு நிர்ணயித்துள்ள இந்த தொகையை ஏற்க முடியாது. மனுதாரருக்கு அவரது கணவர் ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மேலும் அந்த உத்தரவில், ‘ஜீவனாம்சம் தொகையை குடும்பநல நீதிமன்றங்களில் கணவன் செலுத்துவதும், பின்னர் அந்த தொகையை வழங்குவதற்காக அவரது மனைவிக்கு நோட்டீசு அனுப்பி வரவழைத்து, அவரை விசாரித்து, அதன்பின்னர் ஜீவனாம்சம் தொகையை நீதிமன்றங்கள் வழங்குவதும், நீண்ட காலமாக கடை பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாக உள்ளது. நாடு முன்னேறி வருகிறது. மத்திய அரசு ‘டிஜிட்டல்’ இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எனவே, ஜீவனாம்சம் தொகை கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு உடனடியாக கிடைக்க வழி வகை செய்யும் விதமாக, குடும்பநல நீதிமன்றங்கள் எல்லாம் ‘டிஜிட்டல்’ முறைக்கு மாறவேண்டும். இன்னமும் பழைய நடைமுறையை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.

‘இதற்காக இந்த தீர்ப்பை, ஐகோர்ட்டின் மின்னணு நீதிமன்றம் (இகோர்ட்டு) குழுவின் முன்பு, ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளர் தாக்கல் செய்யவேண்டும். இந்த குழுவின் ஒப்புதலை பெற்று, ஜீவனாம்சம் தொகையை நேரடியாக கணவனை பிரிந்து வாழும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் ‘டிஜிட்டல்’ முறையை குடும்பநல நீதிமன்றங்கள் அமல்படுத்த வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story