தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு என்ன ஆகும்? குட்டிக்கதை மூலம் முதல்-அமைச்சர் விளக்கம்


தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு என்ன ஆகும்? குட்டிக்கதை மூலம் முதல்-அமைச்சர் விளக்கம்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறவர்களுக்கு என்னவாகும்? என்பது குறித்து வேலூர் கூட்டத்தில் குட்டிக்கதை மூலம் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வேலூர்,

வேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

குட்டிக்கதை

இங்கே ஒரு கதை ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். சரியாக நடக்கக் கூட தெரியாத ஆமை ஒன்று, தரையில் வேகமாக ஓடும் விலங்குகளையும், வானத்தில் சுதந்திரமாக பறக்கும் பறவைகளையும் கண்டு, பொறாமைப்பட்டு, தன்னால் இப்படி இருக்க முடியவில்லையே என எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்கும். ஒருநாள், அந்த ஆமை ஒரு ஏரிக்கரையில் படுத்துக் கொண்டு, காற்று வாங்கிக் கொண்டிருந்தது.

அப்போது வானத்தில் வட்டமடித்துக் கொண்டி ருந்த கழுகை செய்கை யால் அழைத்து, தன் ஆசையைப் பற்றிக் கூறி புலம்பி யது. ஆமையே, புலம்புவதை நிறுத்து, உன் ஆசையை-நான் இப்போது நிறைவேற்றுகிறேன், என்றபடி அருகில் கிடந்த மூங்கில் தடியை எடுத்து வந்து, ஆமையே இதன் ஒரு முனையை நீ வாயால் கவ்விப் பிடித்துக்கொள், மறுமுனையை நான் கவ்விப் பிடித்துக்கொண்டு வானத்தில் பறப்போம். அப்போது நீ வான்மண்டலம் முழுவதையும் சுற்றிப் பார்க்கலாம் என்று கழுகு கூறியது.

தகுதிக்கு மீறி...

இதைக் கேட்ட ஆமைக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. கழுகு கூறியது போலவே மூங்கிலின் ஒரு முனையை ஆமை பிடித்துக் கொண்டு, கழுகுடன் வானத்தில் பறக்க ஆரம்பித்தது. மேலே, மேலே உயரமாக பறக்க வேண்டுமெண்டுமென்று ஆசைப்பட்ட ஆமைக்கு, ஒரு கட்டத்தில் வானவெளியில் இருக்கும் சந்திரனுக்கும் செல்ல வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தான் மூங்கிலை கவ்விப்பிடித்திருக்கிறோம் என்பதை மறந்து, தன் ஆசையை கழுகிடம் கூறுவதற்காக வாயைப் பிளந்தது.

அவ்வளவுதான், ஆமை வானத்திலிருந்து பூமியை நோக்கி அந்தரத்தில் விழுந்து கொண்டிருந்தது. ஆமை கழுகை நோக்கி, என்னைக் காப்பாற்று! என்னைக் காப்பாற்று! எனக் கதறியது. ஆமையே, நீ உன் தகுதியை மீறி, இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட்டால், இந்த கதிதான் ஏற்படும். இந்த உண்மையை நீ கீழே விழுந்து பிழைத்துக் கொண்டால், மற்ற உயிரினங்களிடமும் கூறு என்றபடி, கழுகு பறந்து விட்டது.

இந்த கதையில் வருவதைப் போல தன் தகுதிக்கு மேல் ஆசைபடுபவர்களுக்கும், பேராசை பிடித்து பதவிக்கு அலைபவர்களுக்கும் ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story