பா.ஜனதாவுக்கு கூட்டம் இல்லை என்று வதந்தி பரப்புவதா? தமிழிசை கண்டனம் ‘திமுகவிற்கு சரமாரி கேள்வி’
தி.மு.க. கூட்டத்தை விட அதிகம் பா.ஜனதாவுக்கு கூட்டம் இல்லை என்று வதந்தி பரப்புவதா? என தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை திசை திருப்பி மாணவர்களை தி.மு.க. தவறாக வழி நடத்துகிறது. அவர்களின் பொய் பிரசாரத்தை திருச்சியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தின் மூலம் முறியடித்துள்ளோம். தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்திய அதே இடத்தில் தான் பா.ஜனதா பொதுக் கூட்டமும் நடந்தது. அவர்களுக்கு திரண்டதை விட அதிகமான கூட்டம் பா.ஜனதாவுக்கு திரண்டிருந்தது. மக்கள் உண்மை நிலையை உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
ஆனால் கூட்டம் தொடங்குவதற்கு முன்பும், கூட்டம் முடிந்த பிறகும் போட்டோக்கள் எடுத்து கூட்டம் இல்லை என்று தவறான தகவல்களை தி.மு.க.வினர் பரப்பி வருகிறார்கள். தி.மு.க.வின் எந்தவிதமான எதிர்மறை அரசியலையும் சந்திக்க நாங்கள் தயார். எனவேதான் மக்களிடம் உண்மை நிலையை தெரிவிப்பதற்காக தி.மு.க. கூட்டம் நடத்திய அதே இடத்தில் மறுநாள் நாங்கள் கூட்டம் நடத்தினோம். வருகிற 13-ந்தேதி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர். நாங்கள் 14-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அப்போது நீட் விவகாரத்தில் உண்மை நிலையையும், தி.மு.க.வின் பொய்யான பிரசாரங்களையும் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம்.
மு.க.ஸ்டாலின் 6 கேள்விகள் கேட்டிருந்தார். அத்தனைக்கும் திருச்சி கூட்டத்தில் பதில் சொல்லி விட்டேன். இப்போது அவருக்கு நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.
மத்தியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது 2010-ம் ஆண்டில் நீட் தேர்வுக்கான முதல் வரைவு மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க. எதிர்க்காதது ஏன்?
2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பு வந்தது. ஆனால் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று குலாம்நபி ஆசாத் அறிவித்தார். அப்போதும் எதிர்க்கவில்லையே ஏன்?
2016-ம் ஆண்டு 1 வருடம் மட்டும் அளிக்கப்படும்என்று மத்திய அரசு அறிவித்தது. அப்படியானால் அதன் பிறகு நீட் வரும் என்று தானே அர்த்தம். அது தெரிந்தும் வாயை மூடிக் கொண்டிருந்தது ஏன்?
ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதுவும் செய்யாமல் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து விட்டு இப்போது பா.ஜனதா மீது பழி போடுவதா?
சகோதரி அனிதா இறந்தது மிகப்பெரிய துயரம். ஆனால் அவரை வைத்து அரசியல் நடத்தும் நீங்கள் லட்சக்கணக்கான அனிதாக்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது உங்களது அரசியல் தர்மம் எங்கே போனது? ஜிப்மர் தன்னாட்சி விவகாரம், எய்ம்ஸ் விவகாரம் பற்றி எல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள். 2008-ம் ஆண்டில்தான் அவற்றுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அப்போது அதை ஏன் எதிர்க்கவில்லை.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களே, 18 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கெடுத்தும் அதற்கான முயற்சிகளை எடுத்தது உண்டா? கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இப்போது வரிந்து கட்டும் நீங்கள் சர்க்காரியா வழக்கில் இருந்து தப்புவதற்காகத்தானே கச்சத்தீவை தாரைவார்க்க உடன்பட்டீர்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்கள். திருவிளையாடல் தருமி புலவரைப் போல் எனக்கு கேள்விகள் கேட்க மட்டும்தான் தெரியும் என்று சொல்லாதீர்கள் என்றார்.
Related Tags :
Next Story