நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லா சான்று : தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லா சான்று : தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Sept 2017 3:45 AM IST (Updated: 12 Sept 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கான தடையில்லா சான்றை 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

குமரி மகா சபையின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் ஆஜரான புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நவோதயா பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் தமிழ்மொழி கூடுதல் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தற்காலிக கட்டிடம்

அப்போது புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் ஆஜராகி, “வருகிற ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் படிப்பதற்கான வசதியுடன் கூடிய தற்காலிக கட்டிடத்தில் பள்ளிகள் இயங்கலாம் என்று சட்ட விதி கூறுகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளியை தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால் பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்” என்றார்.

தடையில்லா சான்று

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாக கற்பிக்கப்படும் என்று நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.

இது தமிழக அரசின் இருமொழி கொள்கையை மீறும் விதத்தில் அமையாது. எனவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும். நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

Next Story